பிரபல நடிகர் கவலைக்கிடம்.. உடலில் என்ன பிரச்னை? வெளியான தகவல்!

 

நடிகர் சரத்பாபு கவலைக்கிடமான நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

1973-ம் ஆண்டு தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் நடிகர் சரத்பாபு. அதன்பின், 1977-ல் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ‘நிழல் நிஜமாகிறது’, ’முள்ளும் மலரும்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘நெற்றிக்கண்’, ‘47 நாட்கள்’, ‘சட்டம்’, ‘மனக்கணக்கு’, ‘வேலைக்காரன்’, ‘முத்து’, ‘அண்ணாமலை’, ‘ஆளவந்தான்’, ‘மாசாணி’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் சரத்பாபு நடித்து பன்முகக் கலைஞனாக திகழ்ந்தார். முதலில் கதாநாயகனாக அறிமுகமான சரத்பாபு, பின்னர் குணச்சித்திர நடிப்பால் தனக்கென்று தனி இடம் பிடித்துக் கொண்டார். சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி ஆகியோரோடு இணைந்து நடித்துள்ளார்.

72 வயதாகும் சரத்பாபு வயது முதிர்வு காரணமாக திரையுலகில் இருந்து விலகி, ஐதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் முழு ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் 20-ம் தேதி கச்சிபுளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.