பெரியார் சிலை குறித்து பேச்சு.. ஸ்டண்ட மாஸ்டர் கணல் கண்ணன் தலைமறைவு?

 

சினமா ஸ்டண்ட மாஸ்டரும் இந்து முண்ணனி பிரமுகருமான கணல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாகி உள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி அமைப்பு சுற்றுப்பயணம் மற்றும் பிரச்சார பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்து முண்ணனியின் கலை மற்றும் பண்பாடு பிரிவின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்து வரும் கனல் கண்ணன், சென்னை மதுரவாயலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நாளொன்றுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது கோவிலின் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என கூறியிருந்தார்.

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணனின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இவரது பேச்சு இரு தரப்பினருக்கிடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதால் கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை கமிஷனர் அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. புகாரின் அடிப்படையில் அவரைக் கைது செய்ய போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும், அவர் தலைமறைவாக உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவே அவர் கைது செய்யப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தகவல் அறிய கனல் கண்ணனைத் தொடர்பு கொண்டால், அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது.