கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து... பிரபல ஹாலிவுட் நடிகர் கவலைக்கிடம்.!!

 

ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர் பனிப்புயல் காரணமாக விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

1995-ம் ஆண்டு வெளியான ‘நேஷனல் லம்பூனின் சீனியர் ட்ரிப்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜெர்மி ரென்னர். கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். அதேபோல 2010-ம் ஆண்டு வெளியான ‘தி டவுன்’ படத்தின் சிறந்த துணை நடிகருக்காக ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். மேலும் ஹாலிவுட்டின் மார்வல் சீரிஸ் படங்களான ‘அவெஞ்சர்ஸ்’, ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படங்களில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் கவனம் பெற்றவர்.

இந்த நிலையில், அமெரிக்காவிலுள்ள ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று பனிப்புயல் ஒன்று தாக்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஆக்டர் ஜெர்மி ரெனர் காரில் சென்றுள்ளார். அப்போது, கடும் குளிர் காற்றுடன் பனிப்பொழிவு கொட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த ரெனரின் கார் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர், படுகாயமடைந்த ரென்னரை மீட்டு, விமானம் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், ‘விபத்தில் சிக்கி படுகாயமடைந்த ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மியின் குடும்பத்தினர் அவருடன் இருப்பதாகவும், சிறந்த சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அவர் விரைந்து குணம் பெற வேண்டும் என தங்களது பிரார்த்தனை குறித்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.