பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார்!! திரையுலகினர் இரங்கல் 

 
பழம்பெரும் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார். அவருக்கு வயது 69.
நடிகர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்டவர் பிரதாப் போத்தன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
1978-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆரவம் எனும் படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர் பின்னர் 1979-ம் ஆண்டு வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான மம்மூட்டியின் சிபிஐ 5 படத்திலும் பிரதாப் போத்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பிரதாப் போத்தன்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் இன்று காலை திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.