பூமி நுரையீரலில் தீ .. கொஞ்சூண்டு சிந்திக்க!

அகல இலைகளைக் கொண்ட உயர்ந்த மரங்கள் வளர்ந்த அமேசான் அடர்ந்த மழைக்காடுகள் பூமி உயிர்வாழ சுவாசம் தரும் நுரையீரல் ஆகும். இது இப்பூமியில் 550 லட்ச ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து வளர்ந்தது. இந்தக் காடுகள் பிரேசில் நாட்டில் அறுபது சதவிகிதம் இருந்தாலும் பெரு, கொலம்பியா, எக்வுவடோர், பொலிவியா, வெனிசுயலா, கயானா, பிரான்ஸ் கயானா, சுரினாம், என இன்னும் எட்டு நாடுகளில் பரவிக் கிடக்கிறது. இந்த மழைக்காடுகளில் ஒன்றை ஒன்று கொன்றும் ஒன்றை ஒன்று தின்றும் பல கோடி
 

பூமி நுரையீரலில் தீ .. கொஞ்சூண்டு சிந்திக்க!

கல இலைகளைக் கொண்ட உயர்ந்த மரங்கள் வளர்ந்த அமேசான் அடர்ந்த மழைக்காடுகள் பூமி உயிர்வாழ சுவாசம் தரும் நுரையீரல் ஆகும். இது இப்பூமியில் 550 லட்ச ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து வளர்ந்தது.

இந்தக் காடுகள் பிரேசில் நாட்டில் அறுபது சதவிகிதம் இருந்தாலும் பெரு, கொலம்பியா, எக்வுவடோர், பொலிவியா, வெனிசுயலா, கயானா, பிரான்ஸ் கயானா, சுரினாம், என இன்னும் எட்டு நாடுகளில் பரவிக் கிடக்கிறது.

இந்த மழைக்காடுகளில் ஒன்றை ஒன்று கொன்றும் ஒன்றை ஒன்று தின்றும் பல கோடி ஊர்வன, நடப்பன, பறப்பன, நீந்துவன, வாழ்கின்றன. அறிவியல் இன்னும் கண்டுபிடித்து பதிவிடாத பல உயிரினங்கள் இங்கு இன்றும் காணப்படுகின்றன.

பல்லாயிரக்கணக்கான மர வகைகள், மலைகள், ஆறுகள், அருவிகள், ஊற்றுகள் இங்கு பலதரப்பட்ட உயிர்களுக்கு அடைக்கலமாகின்றன. விலங்குகள், பூச்சிகள், பாம்புகள், நீர்வாழ் உயிர்கள், பறவைகள் அல்லாமல் இங்கு பலநூற்று வகை பழங்குடி மக்களும் உளர். இயற்கை விரும்பிகளுக்கு அமேசான் ஒரு சொர்க்க பூமியாகும்.

அங்கு வாழும் விலங்குகள் அதனதன் இரையை அங்கேயே இயற்கையாகத்  தேடிக் கொண்டாலும், மனிதன் காடுகளுள் நடமாட ஆரம்பித்ததனால் விலங்குகளால் மனிதனுக்கு ஆபத்து நேரிட வாய்ப்புகள் அதிகம்.

அமேசான் காடிகளில் பயங்கரமான விஷம் கொண்ட நாடோடி சிலந்தி, தோட்டா எறும்பு, பூரான், கொசு, போன்ற பூச்சி புழுக்கள், பச்சை மலைபாம்புகள், முதலைகள், மின்சார விலாங்கு, ஆபத்தான பிரன்ஹா மீன்கள், ஜேகுஆர் எனும் தென் அமெரிக்கச் சிறுத்தைப்புலிகள், நச்சுத்தன்மை கொண்ட அம்புத் தவளைகள் என இன்னும் பலவகை ஆபத்தான உயிரினங்கள் உள.

ஆனாலும் மனிதன் தன் தேவைகளுக்காக காட்டுக்குள் புகாமல் இல்லை. காட்டின் மரங்களை வெட்டாமல் இல்லை. காட்டின் உயிரினங்களை வேட்டையாடாமல்  இல்லை. அவற்றை விரட்டியடிக்காமல் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக இந்த மழைகாடுகளை அழிக்காமல் இல்லை.

காடுகளை அழித்து?

காடுகளை அழித்தால் என்ன ஆகும்? மண் அரிப்பு ஏற்படும், மழை பொழியாது. சுவாசிக்க தூய்மையானக் காற்று கிடைக்காது. உயிர்வாழ நீர் இருக்காது, நிலத்தடி நீர் குறையும், பூமி வற்றிவிடும், மண் வறண்டுவிடும். பூமியின் ஆரோக்கியம் குறையும். பல உயிரினங்கள் அழிந்து போகும். கூடவே மனிதனில் நோய் நொடிகள் பெருகும். பூமியின் வெப்பம் அதிகரிக்கும், பனிப்பாறைகள் உருகும், அகிலத்தின் ஆயுசும் குறைந்துப் போகும்.

இவையனைத்தும் தெரிந்தும் மனிதன் தனது தற்போதைய தேவைக்காக தனது
வருங்காலப் பிள்ளைகளின் பூமியை அழிக்கத் தவறுவதேயில்லை. கடந்த சில ஆண்டுகளாக அமேசான் மழைக்காடுகள் தீயில் எரிந்து கொண்டிருக்கின்றன. இவை பெரும்பாலும் காடுகளை அழித்து, அங்கு ஆடு மாடுகள் வளர்க்க மனிதர்கள் ஏற்படுத்தும் தீ என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஆடுமாடுகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்த்தப்படுவன.

இப்படி இந்த மழைக்காடுகளில் தீ தொடர்ந்தால், 55 லட்சம் ஆண்டுகளாக  வளர்ந்த அமேசான் மழைக்காடுகள், மனிதனால் அடுத்த 50 வருடங்களிலேயே மொத்தமாக அழிந்து போகும். இதனால் பூமிக்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 சகவிகிதம் குறையும், கார்பன் டைஆக்சைட் உற்பத்தி அதிகரிக்கும். நாம் சுவாசிக்கும் தூய காற்றுக்கு பஞ்சமாகும், நச்சுக் காற்றில் பூமி சுழலும்.

அதனால் நாம் ஒவ்வொருவரும், நாம் வாழும் இடங்களிலேயே நம்மால் முடிந்த அளவு
இயற்கையை பாதுகாக்க வேண்டும். பொருளாதாரப் பேராசையில் தேவைக்கு அதிகமாக இயற்கையிடம் சுரண்டுவது நமக்கு ஆபத்து விளைப்பதென நாம் புரிய வேண்டும்.

இயற்கையை அழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அழித்த இயற்கையை எப்படி மீட்டெடுப்பதென்ற வழிமுறைகளை கற்றுக் கடைப்பிடிக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் இயற்கையுடன் இணைந்து வாழ, அதைப் பேண கற்றுத்தர வேண்டும்.

– புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

From around the web