இன்று மட்டுமாவது இதைச் செய்வீர்களா தமிழர்களே!

இந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. இதை இனியும் அனுமதிக்கக் கூடாது. தமிழர்களின் உணர்வைக் காட்ட இன்று ஒட்டுமொத்தமாக சென்னை ஐபிஎல் போட்டியைப் புறக்கணிப்போம், என்ற குரல் தமிழகம் முழுக்க ஓங்கி ஒலிக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ள இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டன. இந்த டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் வேற்று மாநிலத்தவர்கள் அல்ல, தமிழ்நாட்டு இளைஞர்கள், மக்கள்தான். டிக்கெட்டுகளை வாங்கினால் என்ன… போட்டியைப் பார்க்காமல் புறக்கணியுங்கள் என்று தமிழகத்தின் அரசியல்
 

 

இன்று மட்டுமாவது இதைச் செய்வீர்களா தமிழர்களே!

ந்திய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. இதை இனியும் அனுமதிக்கக் கூடாது. தமிழர்களின் உணர்வைக் காட்ட இன்று ஒட்டுமொத்தமாக சென்னை ஐபிஎல் போட்டியைப் புறக்கணிப்போம், என்ற குரல் தமிழகம் முழுக்க ஓங்கி ஒலிக்கிறது.

இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ள இந்தப் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டன. இந்த டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் வேற்று மாநிலத்தவர்கள் அல்ல, தமிழ்நாட்டு இளைஞர்கள், மக்கள்தான். டிக்கெட்டுகளை வாங்கினால் என்ன… போட்டியைப் பார்க்காமல் புறக்கணியுங்கள் என்று தமிழகத்தின் அரசியல் கட்சிகள், திரைத்துறைப் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையில் இன்று காலை தொடங்கி மாலை வரை ஐபிஎல்லை நடத்தக்கூடாது, மீறி நடந்தாலும் அந்தப் போட்டியைப் பார்க்க யாரும் போகக்கூடாது என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சென்னையின் சேப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகின்றன.

இன்று மாலை 5 மணிக்கு இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழ் சினிமாவின் ஒரு பகுதியினர் சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்துகின்றனர்.

இன்னொரு பக்கம், சமூக வலைத்தளங்களில் ஓரிரு பிரமுகர்கள் தவிர்த்து மற்றெல்லோரும் ஐபிஎல் வேண்டாம்… ஐபிஎல் போட்டியைப் புறக்கணிப்போம் என்ற வேண்டுகோளை வைத்துள்ளனர்.

ஐபிஎல் என்பது ஒரு விளையாட்டு. ஒரு விளையாட்டை நிறுத்தினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா… அரசியலில் ஏன் விளையாட்டைக் கலக்கிறீர்கள்? என்றெல்லாம் அந்த சிலர் விதண்டாவாதம் பேசி வருகின்றனர். அவர்கள் எப்போதும் அப்படித்தான்… கண்டுகொள்ளத் தேவையில்லாத வீண் பேச்சு மனிதர்கள்!

இந்தப் போராட்டங்கள், எதிர்ப்புகளைப் பார்த்த ஐபிஎல் நிர்வாகம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு ஏராளமான கெடுபிடிகளை விதித்துள்ளது. இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி அந்தப் போட்டியை, டிக்கெட் வாங்கிவிட்டோமே என்ற ஒரே காரணத்துக்காக பார்க்கத்தான் வேண்டுமா?

இன்னொன்று, காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்தையும் கேலியாகத்தான் பார்க்கிறது மத்திய அரசு. அது காங்கிரஸ் தலைமையில் இருந்தாலும், பாஜக தலைமையில் இயங்கினாலும். இந்த நிலை மாற வேண்டும்… தமிழர் உணர்வுக்கு உடனடி கவனம் கொடுத்து பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இது நடக்க வேண்டுமென்றால் நிச்சயம் இன்றைய ஐபிஎல் போட்டியை 100 சதவீதம் புறக்கணித்தே ஆக வேண்டும்.

செய்வீர்களா தமிழர்களே?

– முதன்மை ஆசிரியர்
வணக்கம் இந்தியா

From around the web