ரஜினியைக் கண்டு எல்லா கட்சி தலைவர்களும் மிரட்சியில் இருக்கிறார்கள்! – தமிழருவி மணியன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைக்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை 80 சதவீத மக்கள் வரவேற்பதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த பேட்டி: தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம் என்ற ரஜினியின் கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா? நூற்றுக்கு நூறு சதவீதம் ஏற்கிறேன். நான் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள 80 சதவீத
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறைக்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை 80 சதவீத மக்கள் வரவேற்பதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஒரு நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த பேட்டி:

தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம் என்ற ரஜினியின் கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா?

நூற்றுக்கு நூறு சதவீதம் ஏற்கிறேன். நான் மட்டுமல்ல; தமிழகத்தில் உள்ள 80 சதவீத மக்கள், தாங்கள் நினைத்ததையே ரஜினி பேசியிருப்பதாக மகிழ்வுடன் வரவேற்கின்றனர். வாக்குகள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மனதில் உள்ளதை பேசத் தயங்கும் அரசியல் தலைவர்களுக்கு நடுவில், மனதில்பட்டதை தைரியத்துடன் தெளிவாக ரஜினி பேசியுள்ளார். எனவே, மக்கள் ஆதரவு அவருக்குத்தான்.

போராட்டமே கூடாது என்பது சரியா?

போராட்டமே கூடாது என ரஜினி எங்கும் சொல்லவில்லையே. போராடவே கூடாது என்றால் மனித வாழ்க்கையில் எதுவும் இல்லை. போராட்டங்களே வாழ்க்கை என தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும். மக்களுக்கு பயனளிக்கும் போராட்டம், தூண்டிவிடப்படும் போராட்டம் என இரண்டு வகையாகப் பிரித்து, தூண்டிவிடப்படும் போராட்டத்துக்கு எதிராகவே ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் போராட்டக்களமாக மாறினால் யாரும் தொழில் தொடங்க வரமாட்டார்கள். வேலைவாய்ப்புகள் கிடைக்காது. இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அக்கறையில்தான் அவர் பேசியிருக்கிறார்.

போராடுபவர்கள் எல்லாம் சமூக விரோதிகளா?

தூத்துக்குடி போராட்டம் சரியான திசையில்தான் சென்றது. சமூக விரோதிகள் ஊடுருவிய பிறகு வன்முறை ஏற்பட்டது என்பதை ரஜினி தெளிவாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டையும் கடுமையாக கண்டித்துள்ளார். 13 உயிர்கள் பலியான பிறகு மறுபடியும் ஆலையை திறக்க வேண்டும் என்ற நினைப்புகூட ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு வரக் கூடாது என பேசியிருக்கிறார். இவ்வளவு கடுமையாக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு எதிராகப் பேசியவர் எனக்குத் தெரிந்து யாரும் இல்லை.

அதிமுக, பாஜகவின் குரலாக ரஜினி பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

தனிநபர் ரஜினியை இத்தனை கட்சிகளும் சேர்ந்து வரிந்து கட்டி எதிர்ப்பதைப் பார்க்கும்போது அவருக்குள்ள செல்வாக்கை உணர முடிகிறது. ரஜினியைக் கண்டு எல்லோரும் மிரட்சியில் இருக்கிறார்கள். காவல் துறையினரும், ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் தமிழர்கள்தானே, அவர்களைத் தாக்கலாமா? இதை தட்டிக் கேட்டால் பொங்குகிறார்கள். தூத்துக்குடியில் ரஜினி பேசியதுதான் காந்தியம்.

போராட்டத்துக்கு எதிராகப் பேசும் ரஜினியால் தேர்தல் அரசியலை எப்படி எதிர்கொள்ள முடியும்?

2016 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பாருங்கள். போராட்டமே வாழ்க்கையாக இருக்கும் கட்சிகளும், நபர்களும் நோட்டாவுக்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றுள்ளனர். எனவே, தேர்தல் அரசியலில் மக்களின் மனசாட்சியை அறிந்துள்ள ரஜினி போன்றவர்களே வெற்றி பெற முடியும். அதையும் பார்க்கத்தான் போகிறீர்கள்.

சமூக ஊடகங்களில் ரஜினிக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதே?

சமூக ஊடகங்களில் சமூக பொறுப்புணர்வுடன் கருத்து தெரிவிப்பவர்கள் மிகவும் குறைவு. ஒரு சிலர் அருவெறுக்கத்தக்க வகையில் ரஜினியை விமர்சிப்பதால் அது தமிழகத்தின் ஒட்டுமொத்த குரலாகிவிடாது. சகதியை கையில் அள்ளி மேலே வீசினால் அதனால் சூரியனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ரஜினி சூரியன். துணிச்சலுடன் கருத்து சொல்லும் அவரைப் போன்ற தலைவர்களைத்தான் மக்கள் ஏற்பார்கள்.

இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

From around the web