தமிழ் ஆர்வலர் பழநிசாமி மறைவு… பெரும் துயரில் அமெரிக்க தமிழ் சமூகம்!

டல்லாஸ்: தமிழ் ஆர்வலர் பழநிசாமி யின்அகால மரணம் டல்லாஸ் தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மண்ணில் பிறக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என தமிழ் இனத்தின் அடையாளத்தை ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பள்ளிகள், அமைப்புகளில் எண்ணற்றவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு மாநகரப் பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலர், அலுவலக வேலை நேரம் போக, முழு நேரத் தமிழ்ப் பணிகளுக்காக தங்களை அர்ப்பணித்து வருகிறார்கள். டல்லாஸில் 19 ஆண்டுகளாக வசித்து
 

 

தமிழ் ஆர்வலர் பழநிசாமி மறைவு… பெரும் துயரில் அமெரிக்க தமிழ் சமூகம்!
டல்லாஸ்:  தமிழ் ஆர்வலர் பழநிசாமி யின்அகால மரணம் டல்லாஸ் தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க மண்ணில் பிறக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் என தமிழ் இனத்தின் அடையாளத்தை ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பள்ளிகள், அமைப்புகளில் எண்ணற்றவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு மாநகரப் பகுதிகளிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய சிலர், அலுவலக வேலை நேரம் போக, முழு நேரத் தமிழ்ப் பணிகளுக்காக தங்களை அர்ப்பணித்து வருகிறார்கள்.

டல்லாஸில் 19 ஆண்டுகளாக வசித்து வந்த பழநிசாமி, தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை தமிழ்ப் பணிகளுக்காக, குறிப்பாக குழந்தைகளின் எதிர்கால நலன்களுக்காகவே செலவிட்டவர். தமிழ் நலம் போற்றித் திகழ்ந்த, அனைவருடைய அன்பிற்கும் உரிய அவருடைய அகால மரணம் டல்லாஸ் தமிழ்ச் சமுதாயத்திற்கு பெரும் அதிர்ச்சியையும், ஈடில்லா இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

54 வயது நிரம்பிய பழநிசாமி, அலுவலகம் முடிந்து வீடு திரும்ப காரை ஸ்டார்ட் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இத்தனைக்கும் அவர் உடல்நலத்தை அக்கறையுடன் பேணிக்காப்பவர், கடந்த டிசம்பர் மாதம் தான் மாரத்தான் போட்டியில் 13 மைல் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். முன்னதாக இத்தகைய மாரத்தான் போட்டிகள் ஏராளமாக பங்கெடுத்துள்ளார்

ஆயிரக்கணக்கான மணி நேரங்களை, அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயப் பணிகளுக்காக செலவிட்டவர். அமெரிக்காவில் கொங்கு தமிழ்ப் பள்ளியை நிறுவி 16 ஆண்டுகளாக வாரம்தோறும் திறம்பட நடத்தி வந்துள்ளார். சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நடத்திவரும் திருக்குறள் மற்றும் தமிழ்த்திறன் போட்டிகளுக்கு 10 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பேற்று செயல்படுத்தியுள்ளார்.

அமெரிக்கத் தமிழ் குழந்தைகளுக்கு, தமிழ்ச் சமுதாயப் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளை வடிவமைத்தவர். 14 ஆண்டுகளாக, பால விகாஸ் பள்ளியில் வாரம்தோறும் 4 மணி நேரம் தன்னார்வப் பணியாற்றி வந்துள்ளார். நூற்றுக்கணக்கான நண்பர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆசானாக இருந்து வழி நடத்தியுள்ளார்.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளில் தமிழ் இலக்கிய, பண்பாட்டு நிகழ்வுகளில் தனக்கே உரிய சிறப்புத் தன்மையுடன் செயலாற்றியவர். திருக்குறளை முழுமையாக கற்றறிந்தவர், அதன் வழி தனது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவரும் ஆவார். அவருடைய திடீர் மறைவு குடும்பத்தாருக்கும், அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தோன்றின் புகழோடு தோன்றுக என்னும் குறளின் பொருள்படித் தமிழ்போற்றத் தமிழின் தலைமகனாக வாழ்ந்து, தன்னோடு இணைந்தவர்களையும் தமிழ் வழிப்படுத்திப் பல்வேறு சமுதாயப் பணிகள் மற்றும் தமிழ் அமைப்புகளில் பங்காற்றியவர்.

அன்பும், அறனும் உடைத்தாயின் சுற்றமும், நட்பும் நீண்ட காலம் பண்போடும் நல்வழிப்பயனோடும் இணைந்து வாழ முடியும் எனக் கண்முன்னே வாழ்ந்து காட்டியவர். நம்மோடு இன்றில்லை என்பதை ஏற்க இயலாது குடும்பத்தாருடன், நண்பர்களும் வாடித் தவித்திருக்கிறோம்.

அவரது குடும்பத்தினருக்கு இனிவரும் நாள்களில் உறுதுணையாக உடன் பயணிக்க முழு உணர்வுடனும், உரிமையுடனும் தமிழ்ச்சமூகம் பங்கேற்றுப் பொருள் உதவி செய்வதைத் தன் கடமையாக ஏற்றுக் கொள்வோம்,” என்று டல்லாஸ் தமிழ்ச் சமுதாயத்தின் சார்பில் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

மிகச் சிறந்த மனிதர், தமிழார்வலர் ஒருவரை இழந்து வாடும் அமெரிக்கத் தமிழ்ச் சமுதாயத்தின் துயரத்தில் பங்கெடுத்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

– வணக்கம் இந்தியா

From around the web