பாவி இல்லை நான்…. தாய்! – சிறுகதை

மாலை மங்கிக் கொண்டிருக்கிறது. எங்கோச் சென்றுவிட்டு நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்து சிறுகச் சிறுகச் நான் என் மகள் பள்ளிச் சீருடைக்கு சேர்த்து வைத்த கடுகு டப்பா காசைக் கேட்டு என்னை அடித்து உதைத்து எடுத்துக் கொண்டு தெருமுனை டாஸ்மாக் அரசு மதுபான கடைக்கு போய்விட்டான் நான் கட்டியவன்… இனி எத்தனை நாட்கள் கழித்து வருவான் எனத் தெரியாது. மகள் வரும் நேரம் அவள் நான் அழுவதைப் பார்த்துவிடக் கூடாதென முகத்தை அவசரமாகக் கழுவிவிட்டு வீங்கிய
 

மாலை மங்கிக் கொண்டிருக்கிறது. எங்கோச் சென்றுவிட்டு நான்கு நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்து சிறுகச் சிறுகச் நான் என் மகள் பள்ளிச் சீருடைக்கு சேர்த்து வைத்த கடுகு டப்பா காசைக் கேட்டு என்னை அடித்து உதைத்து எடுத்துக் கொண்டு தெருமுனை டாஸ்மாக் அரசு மதுபான கடைக்கு போய்விட்டான் நான் கட்டியவன்…

இனி எத்தனை நாட்கள் கழித்து வருவான் எனத் தெரியாது. மகள் வரும் நேரம் அவள் நான் அழுவதைப் பார்த்துவிடக் கூடாதென முகத்தை அவசரமாகக் கழுவிவிட்டு வீங்கிய உதட்டில் புன்னகையை வரவைத்து காத்திருக்கிறேன்.

பள்ளிச்சென்று வந்த மகள் கண்ணீருடன் சொல்கிறாள். “அம்மா! நாளை சீருடை அணியாமல் கட்டணம் கட்டாமல் ஆசிரியர் பள்ளி வரக்கூடாதென்கிறார்” என.சொன்னவள் தன் வயதொத்த பிள்ளைகளைப் போல் வெளியில் விளையாடப் போகாமல் அதோ குடிசையின் மூலையில் மண்ணெண்ணை விளக்கில் பாடம் எழுதிக் கொண்டிருக்கிறாள்.

ஒரு கைச் சோறு தான் பாத்திரத்தில். பசியோடு வருவாளே என நான் பட்டினிக் கிடந்து அவளுக்கு எடுத்து வைத்தது..பக்கத்து வீட்டு பரிமளாவிடம் கொஞ்சம் குழம்பு கேட்டு சோற்றில் குழைத்து அள்ளி கொடுக்கிறேன்.ஆவலாய்த் தின்றுவிட்டு மீண்டும் புத்தகங்களில் முகத்தை புதைத்துக் கொள்கிறாள்.

வகுப்பிற்கு தேவையான பழைய புத்தகங்களை பண்ணையார் மகளிடம் ஒவ்வொரு வருடமும் அவள் பரீட்சை எழுதி முடித்தப்பின் வாங்கி வந்துவிடுவாள். படிப்பதென்றால் அவ்வளவு விருப்பம். எப்படி இவளை படிக்க வைப்பேனென என் மகளை பார்த்தபடி யோசித்து நிற்கிறேன். காலை எழுந்து பள்ளிக்கு அனுப்ப சீருடை இல்லை. பள்ளிக்கு கட்ட கட்டணம் இல்லை. ஏன் சாப்பிடக் கொடுக்கக்கூட ஏதும் இல்லை. பட்டினியுடன் பள்ளிக்கு எப்படி அனுப்புவேன்?.

நான் வயலுக்கு வேலைக்கு போனால் பண்ணையார் காசு சரியாகக் கொடுப்பதில்லை. அவரும் என்னதான் செய்வார்.மழையில்லை…. விளைச்சலில்லை. போட்ட விதைகள் முளைப்பதில்லை. நிலத்தடியில் நீரே இல்லை. கொஞ்சங்கொஞ்சமாக பண்ணையார் தன் நிலத்தை கிடைக்கிற விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார். அவரின் வயக்காடுகளில் வீடுகள் இனி கட்டப் போகிறார்களாம்.

கட்டிட வேலை ஆரம்பித்தாலாவது தினக்கூலிக்கு செல்லலாம் என்றால் இன்னும் ஆரம்பித்த பாடில்லை. இதோ! பல கனவுகளோடு கவலைகள் ஏதுமின்றி இன்னும் எழுதிக் கொண்டே உற்சாகமாகச் சொல்கிறாள் மகள்,தான் மருத்துவராகப் போவதாக. அந்தச் சின்ன உயிரின் கனவை எப்படி நான் நிறைவேற்றுவேன்?. மீண்டும் யோசிக்கிறேன்.

மேற்கில் கதிரவன் முற்றிலும் மறைந்து இருள் முற்றிலும் சூழ்கிறது. அமாவாசை போலும், நிலாவை வானில் காணவில்லை. மண்ணெண்ணெய் ஒளி குடிசையைக் கவ்விக் கொள்ள என்னைப் போல் கல்வியில்லாமல் இவள் ஒருநாளும் ஒடுங்கி இருளில் தவிக்கக் கூடாதென மனம் கவலையில் மூழ்கிறது.

கண்கள் குளமாவதற்கு முன்பு மகளின் நெற்றியில் முத்தமிட்டு “கதவை தாளிட்டுக் கொள் அம்மா வர நேரமாகும்” என்கிறேன். “சரிம்மா” என்றவள் கண்களில் பல கேள்விகள்.

தீபாவளிக்கு பண்ணையில் கூலிக்கு பதில் கொடுத்த அந்த ஒரு நல்ல புடவையை அணிந்துக் கொண்டு கிளம்பிவிட்டேன் அந்தப் பெரிய வீட்டை நோக்கி. இதுவரை அந்த வீட்டை அசிங்கமாகவே பார்த்து வந்த என் மனம் படப்படவென அடிக்கத் துவங்கிற்று. இதோ படியேறி உள்ளே வந்து விட்டேன். பெண்கள் பலர் அளவிற்கு அதிகமான அரிதாரம் பூசிக்கொண்டு தங்கள் இயல்பானக் குரலை மறைத்து ஏதோ போல பேசியபடி நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். பலதரபட்ட ஆண்கள் வந்து போவதுமாய் உள்ளார்கள்.

இரவு ஓடிக் கொண்டே இருக்கிறது ஜாமம் தாண்டி. ஆனால் அந்தப் பாவப்பட்ட வீடு அப்பொழுது தான் பலர் வருகையால் விழித்துக் கொண்டிருக்கிறது. வெளியெங்கும் இருள், அந்த வீட்டினுள் மட்டும் வெளிச்சம். வெளியெங்கும் மௌனம், அந்த வீட்டினுள் மட்டும் சத்தம். நான் பார்க்கிறேன். வருபவர் ஒருவரின் முகத்திலும் ஒளியில்லை, கலையில்லை. பணக்காரார் ஏழை என்ற பாகுபாடின்றி ஏதோ ஒரு பாரத்தை சுமந்தவண்ணம் நுழைகின்றனர். வரும் எவரும் தங்கள் உண்மைப் பெயரைச் சொல்வதில்லை. உதட்டில் உண்மைப் புன்னகை அணிவதில்லை. எத்தனையோ பேர் வருகின்றனர். ஆனால் …. ஒன்று…தன்னை நாடிவரும் எவரையும் வரவேற்காமல் அவ்வீடு வெளியேற்றுவதில்லை .

அங்கு வரும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பாவப்பட்ட வீட்டில் ஏதோ ஒருதேவை என்பதை உணர்கிறேன்.

சிலர் தேடலில்
சிலர் வருத்தத்தில்
சிலர் ஏமாற்றத்தில்
சிலர் மனக்குழப்பத்தில்
சிலர் தனிமையில்
சிலர் ஆன்ம தாகத்தில்
சிலர் உடல் மோகத்தில்

இதோ நானும் அங்கே சேவையில். அரிதாரம் அள்ளி பூசிக்கொண்டு இயல்பை களைந்து பேசிக்கொண்டு. இரவு முடிந்து கதிருடன் ஒளியுடன் வைகறைப் பொழுது என் வாழ்க்கை திசையை மாற்றி விடிந்துக் கொண்டிருக்கிறது. என் மகள் பள்ளிக் கட்டணம் இனி கட்டிவிடுவேன். என் மகளைப் பட்டிணி போடாமல் இனி பள்ளி அனுப்புவேன். என் மகள் சீருடை வாங்க இனி தொல்லையில்லை.. வெளியேறுகிறேன் பெரிய வீட்டைவிட்டு என் குடிசைக்கு … புதிய நோக்குடன்.

இப்படியே வருடங்கள் பல உருண்டோடின. மகள் பட்டமும் வாங்கிவிட்டாள். இன்று மருத்துவர் ஆகவில்லை. நீட் தேர்வுக்கு தனியாகப் பணம் கட்ட இயலவில்லை. அதனால் ஆசிரியராக பணி செய்யப் போகிறாள். தன்னைப் போன்ற பிள்ளைகளுக்கு கல்வித் தரப் போகிறாள்.

பட்டமழிப்பு விழா முடிந்து பெருமிதத்துடன் வீடு வந்து பெரிய வீட்டிற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் போது, நான் சுமந்து பெற்ற என் பிள்ளை என் கண்களைப் பார்க்கிறாள் . “இனி நம் இரவில் நிலா பகலில் சூரியன் அம்மா.. வீட்டைவிட்டு எங்கும் செல்ல வேண்டாம்,” என்கிறாள்.

மகளை கட்டி அணைக்கிறேன். கண்ணீரால் நிறைக்கிறேன் மகள் மடியில். புதிதாகப் பிறக்கிறேன். பாவி இல்லை நான்… தாய் என்பதை முதன்முறையாக உணர்கிறேன்.

– புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

படம்: ஓவியர் எஸ் இளையராஜா

பி.கு…யாரையும் அவர்கள் சூழலை முழுமையாகப் புரியாமல் தவறாக எடை போடாதீர்கள். அவரவர் பாரம் அவரவர்க்கு. இந்தச் சமூகம் சிலரை சிலவற்றிற்கு அவரவர் சூழலால் தள்ளிவிடுகிறது. பிறரை ஏமாற்றி வாழாமல், பொய் கூறாமல், திருடாமல், தீங்கு விளைவிக்காமல் செய்யும் எந்தத் தொழிலும் பாவத் தொழிலல்ல.

From around the web