நீரெல்லாம் கங்கை..

நீரெல்லாம் கங்கை நிலமெல்லாம் காசி நாரெல்லாம் பூக்கள் நடையெல்லாம் நடனம் தேரெல்லாம் மெல்லத் தெருவெல்லாம் ஊர வாராய் என் தோழமையே வற்றாத அன்பருவி ஊராரைக் கேட்டேன் உறவாரைக் கேட்டேன் யாரென்றே அறியா ஏனையரைக் கேட்டேன் தேரென்ன இங்கே தெருவென்ன வசந்தம் ஊரென்ன இன்று உயிர்பூத்த தென்று மாரெல்லாம் சந்தனம் முகமெல்லாம் குங்குமம் கார்கால உதயமாய் கண்ணெல்லாம் பூத்து ஊர்ந்து குவிந்த மக்கள் உள்ளவனம் அசைய சேர்ந்த ஒருகுரலில் சொன்னமொழி தெரியுமா வானூறி மழைபொழியும் வயலூறிக் கதிர்வளையும் தேனூறிப்
 

நீரெல்லாம் கங்கை..நீரெல்லாம் கங்கை
நிலமெல்லாம் காசி
நாரெல்லாம் பூக்கள்
நடையெல்லாம் நடனம்

தேரெல்லாம் மெல்லத்
தெருவெல்லாம் ஊர
வாராய் என் தோழமையே
வற்றாத அன்பருவி

ஊராரைக் கேட்டேன்
உறவாரைக் கேட்டேன்
யாரென்றே அறியா
ஏனையரைக் கேட்டேன்

தேரென்ன இங்கே
தெருவென்ன வசந்தம்
ஊரென்ன இன்று
உயிர்பூத்த தென்று

மாரெல்லாம் சந்தனம்
முகமெல்லாம் குங்குமம்
கார்கால உதயமாய்
கண்ணெல்லாம் பூத்து

ஊர்ந்து குவிந்த மக்கள்
உள்ளவனம் அசைய
சேர்ந்த ஒருகுரலில்
சொன்னமொழி தெரியுமா

வானூறி மழைபொழியும்
வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
தினம்பாடி வண்டாடும்

காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்

தேர்ந்த குணமகனாம்
தெளிந்த விழிமகனாம்
பார்த்த கணமே நெஞ்சில்
படரும் இளையவனாம்

சேர்ந்து சிறக்கவோர்
சின்னமலர்க் கரத்தையின்று
கோத்து மகிழவந்த
கல்யாணத் திருநாளாம்

வேறென்ன வேண்டுமென்
விழியோரம் சுகமுத்து
நூறினில் ஒன்றல்ல
நூறுகோடியில் ஒன்றாகி

ஊற்றெனநல் சுகம்வளர
உதித்த இம்மணவாழ்வில்
ஏற்றிவிடு சுடரொன்று
எந்நாளும் ஒளிவீச

அன்புடன் புகாரி, கனடா

From around the web