“பூ பூக்கும் தருணத்திற்காக” காத்துக் கிடக்கிறேன்! நா.முத்துக்குமார் வரிகளில் உருகும் ரசிகர்!!

45 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரையும் தன் அசாத்தியமான எழுத்தால் அசரடிக்கப்போகிற அறிவுக்குழந்தை பிறந்தது. அக்குழந்தை பின்பொரு நாள் தன் பிறப்பையும் பதிவு செய்தது இப்படியாக.. “1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை
 

“பூ பூக்கும் தருணத்திற்காக” காத்துக் கிடக்கிறேன்! நா.முத்துக்குமார் வரிகளில் உருகும் ரசிகர்!!45 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரையும் தன் அசாத்தியமான எழுத்தால் அசரடிக்கப்போகிற அறிவுக்குழந்தை பிறந்தது. அக்குழந்தை பின்பொரு நாள் தன் பிறப்பையும் பதிவு செய்தது இப்படியாக..

“1975-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி என் தாயின் பிறந்தகமான சென்னையில், எழும்பூர் அரசு மருத்துவ மனையில் நான் பிறந்தபோது, ஒட்டுமொத்த மருத்துவமனையே மாடிக்கு ஓடி வந்தது. என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று நான் என் பால்யத்தின் முதல் புன்னகையைப் பூமிக்குப் பரிசளித்தபோது, அந்தக் கூட்டம் என்னைக் கடந்து, மொட்டை மாடிக்குச் சென்றது.

ஒரு சில உயரமான கட்டடங்களே சென்னையாக இருந்த அந்த மொட்டை மாடியில் பதற்றத்துடன் அவர்கள் பார்த்த காட்சி எல்.ஐ.சி. கட்டடம் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருப்பதை. இப்படித்தான் நண்பர்களே நான் பிறந்தபோதே என்னைச் சுற்றித் தீப்பிடித்தது. அந்தத் தீயை அபசகுனமாகக் கருதாமல், என் தகப்பன் தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினான், ‘இன்று உலகின் இரண்டாவது அறிவாளி பிறந்தான்!’ நான் முதல் முறையாக நா.முத்துக்குமார் ஆனேன்!”

அதன் பின்பு அக்குழந்தை இவ்வுலகின் மூலை முடுக்கெல்லாம் தன் பாடல்களின் வாயிலாக சென்று, பல விருதுகளை வென்று வந்ததெல்லாம் வரலாறு. எப்படியாகினும் ஒரு நாளில் ஒரு முறையேனும் உங்கள் செவிகளை அக்குழந்தையின் செந்தமிழ் கவிவரிகள் வந்தடைந்தே தீரும் ஏதேனும் ஒரு வழியில்..

“பேருந்தில், டீக்கடையில் என பொருள்வாயிற் பிரிந்த நண்பர்களின் தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி :“காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?”

என் பதில்: “பத்து வருடத்திற்கு முந்தைய டென்த் ஏ கிளாஸ் ரூம்ல” -நா.முத்துக்குமார்.”

நீ “காயத்ரி”க்காக எழுதிய கவிதைகள் பல “காயத்ரி”களால் இன்றும் காதலிக்கப்படுகிறது.. ஒரு காயத்ரிக்கு செல்ல வேண்டியது, ஓராயிரம் காயத்ரிகளிடம் சென்றடைந்து விட்டது.

“காதல் கவிதை எழுதுபவர்கள்
கவிதை மட்டுமே எழுதுகிறார்கள்.
அதை வாங்கிச் செல்லும் பாக்கியவான்களே
காதலிக்கிறார்கள்..” என்ற உன் கவிதையை போல

“காயத்ரி” எனும் துர்பாக்கியவதிக்கு உன்னுடைய கவிதையை சொல்லிக் கூட ஏதோவொரு ‘பாக்கியவான்’ காதலித்திருக்கலாம். ஏனெனில் எல்லா காதல்களுக்கும் ஏதோவொரு விதத்தில் உன் வரிகள் உதவி புரிந்திருக்கும். எமக்கான காதல் கவிதைகளை எதனையும் மிச்சம் வைக்காமல் நீயே எழுதி விட்டாய். எல்லா காதலர்களுக்குமான காதல் கீதமாக உன் ஏதோவொரு பாடல் ஒலித்துக் கொண்டு இருக்கும்.

எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் பிறந்தவர்கள்  இரண்டாயிரம்களில் காதலிக்க துவங்கியதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று திரும்பிய திசையெல்லாம் பாடிக்கொண்டிருந்த உன் பாடல்கள் தான்.

உறவுகளின் உன்னதத்தை உணரவைத்து அதில் உறைய வைத்தது “அணிலாடும் முன்றில்” அம்மா என்பவளை ஆதியிலேயே இழந்த ஜீவன் அத்தாயின் ஈடு செய்ய இயலா இழப்பை,

“அழுது புரண்டு
நான் அலறிய ராத்திரிகளில்,
நிலா இருந்தது.
சோறும் இருந்தது.
ஊட்டத்தான் தாயில்லை!”
என்றும்,

அப்பா என்பவர் அம்மாவுக்கு மாற்று அல்ல, அவர் தான் வாழ்வின் ஊற்று என்பதை,

“எங்கள் கிளைகள் பூப்பதற்காகவே,
நீங்கள் வேராக மண்ணுக்குள் மறைந்துகிடந்தீர்கள்
உண்மையில் பூக்கள் ஒருநாள் மண்ணில் உதிர்வது எல்லாம்,
வோ்களை முத்தமிடத்தானோ?”

என்றும்,

“அக்காக்கள் இல்லாத வீடு அரை வீடு” என்று என்னைப் போன்ற அக்காக்களுடன் வாழ வாய்க்காதவர்களுக்காகவும், தங்கைகளுடன் பிறக்காதவர்களின் பிரியத்தை,

“மிகச் சாதாரணமாய்
கேட்டுவிட்டாய் நண்பா,
‘உனக்கென்ன
அக்காவா? தங்கையா?
கஷ்டப்பட்டுச் சம்பாதித்து
கல்யாணம் பண்ணித் தர,
ஒரே பையன்’ என்று.
எனில்
கஷ்டப்பட்டுச் சம்பாதித்து
கல்யாணம் பண்ணித் தர மட்டுமா
அக்காவும் தங்கையும்?”

என்றும்,

தம்பிக்காக அனைத்து ஆசைகளையும் தியாகம் செய்யும் அண்ணன் தான் பார்த்து பார்த்து வளர்க்கும் தன் குழந்தையைப் போன்ற சக உதிரமான தம்பிக்கு,

“நான் மலர்ந்த தொப்புள் கொடியின் இன்னொரு பூ
என் உதிரத்தின் பங்காளி
வேற்றுருவன் ஆனாலும், என் மாற்றுருவன்,
நான் உண்ட மிச்சப் பாலின் ருசி அறிந்தவன்
ஆதலால் என் பசி அறிந்தவன்
துக்கத்தில் என்னை தாங்கும் தூண்
சக ஊன்!”

என்றும்,

எப்போதும் அன்பை வெளிப்படுத்திக் கொண்டும், அதே அன்பை எதிர்பார்த்துக் கொண்டும் இருக்கும் மனைவிக்கு,

“கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ நேரம் பேசுவோம்? இப்போ உடனே போனை வெச்சி டுறீங்க’’ என்று ஆதங்கப்படுவாய். அடி போடி என் பைத்தியக்காரி. அலையின் வேகம் குறைந்தாலும், நதி எப்போதும் கரையுடன் உரையாடிக்கொண்டுதான் இருக்கும்.”
என்றும்,

தன் உயிரிலிருந்து உருவான உடலுக்கு, உதிரத்திலிருந்து வந்த உருவத்திற்கு, மொத்தத்தில்  சொல்லப்போனால் தன் உலகத்திற்கு..

“என் செல்லமே!
நீ பிறந்த பிறகுதான்
என் அப்பாவின் அன்பை
அதிகமாக உணர்கிறேன்!
உனக்கு ஒரு மகன் பிறந்ததும்
என் அன்பை அறிவாய் நீ!”
என்றும்,

இதுமட்டுமல்லாமல் இன்னும் இன்னுமிருக்கும் உறவுகளையும், உயிர்களையும் வாசிக்க வைத்து, நேசிக்க வைத்தவனே உமக்கு வாழ்த்துகள். நீ பயணங்களின் காதலன் என்பதை அறிவேன். அந்த பயணங்களில் எப்போதும் பறவையின் மனம் இருக்கும். அந்த பறவை எப்போதும் பறத்தலை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும். உன்னால் மட்டும்தான் மனிதர்கள் தவிர மற்ற உயிர்களையும் கவிதைப்படுத்த முடிகிறது. 

“பூக்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்,
விரல்களால் உயிர் பறித்து அவன் நுகர்வதற்கு முந்தைய காலம் வரை..”

என்று பூக்களோடும்,

“சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய்ச் சொல்வது
வீடு மாற்றுவதை?”
என்று நாய்களோடும்,

“ஆடு மாடு மேல உள்ள பாசம்
வீட்டு ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கும்”
என்று ஆடுகளோடும், மாடுகளோடும் மனிதத்தை பேசமுடிகிறது.

“நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து
கருணையுடன் வெப்பத்தைக் கடத்து
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில்..”

இவ்வரிகளை கேட்கும் போது இளஞ்சூடும், அந்த கதகதப்பும் என்னில் பரவுகிறது.  இதைப்போலவே இன்னுமோரு வரி, “கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கித் தவிக்குது..” அவ்விரல் கிடைத்தால் இவ்வாழ்வு வரம்.

இன்னும் இன்னும் என்று சொல்லிக் கொண்டே போகவும், சிலாகிக்கவும், கொண்டாடவும், கண்ணீர் விடவும், கரைந்து போகவும் சொல்லாமல் விட்ட ஓராயிரம் பாடல்கள் இருக்கிறது. தன் பிறப்பை பதிவு செய்த அக்குழந்தை பின்பொரு நாள் இப்படியும் பதிவு செய்தது.

“இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்,
இறக்க வேண்டும் நான்”

இறுதியாக,

“இடி விழுந்த வீட்டினில் இன்று பூச்செடிகள் பூக்கிறதே..!” இவ்வரிகளின் நம்பிக்கையில், அந்த “பூ பூக்கும் தருணத்திற்காக” காத்துக் கிடக்கிறேன், ப்ளேலிஸ்ட்டில் நா.முத்துக்குமார் பாடல்களை கேட்டபடி.

– Pradhee

A1TamilNews.com

 

From around the web