பிரான்சில் முதல் திருவள்ளுவர் சிலை திறப்பு.. பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

 
France

பிரான்சில் தமிழர்களின் கலாச்சார சின்னமாக கருதப்படும் திருவள்ளுவர் சிலை நேற்று (டிச. 10) திறந்து வைக்கப்பட்டது.

பாஸ்டில் தினத்திற்காக கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, பாரீஸ் நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுகையில், “உலகின் பழமையான மொழி தமிழ். உலகின் மிகப் பழமையான மொழி இந்திய மொழி என்பதில் மிகப் பெரிய பெருமை எமக்கு உண்டு. பிரான்ஸ் நாட்டில் இந்தியாவின் சார்பாக திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட உள்ளது. பிரான்ஸில் திருவள்ளுவர் சிலையை அமைப்பது இந்தியாவுக்கு கிடைத்த பெருமை.” எனத் தெரிவித்திருந்தார்.

France

பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை வைக்கப்படுவதற்கான முன்னெடுப்பை அந்நாட்டில் உள்ள தமிழ் கலாச்சார சங்கம் முன்னெடுத்தது. திருவள்ளுவரின் சிறப்பை, பிரான்ஸ் மக்களும் கொண்டாடும் வகையில், அங்கு திருவள்ளுவர் சிலை, செர்ஜி பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், பிரான்சில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வொரெயால் தமிழ் கலாசார மன்ற நிறுவனத் தலைவர் இலங்கைவேந்தன், பாண்டுரங்கன், இலங்கை கிழக்கு மாகாண கவர்னர் செந்தில் தொண்டைமான், இந்திய-பிரான்ஸ் துாதர் ஜாவித் அஷ்ரப், செர்ஜி நகர மேயர் ழான் போல் ழான்தம், பாரிஸ் மற்றும் ஹம்பர்க் ஆராய்ச்சியாளர் ழான் லுயிக் செவிய்யார், முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து, டெரகோட்டா கலைஞர் முனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்நிலையில், திருவள்ளுவர் சிலை புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, “பிரான்சின் செர்ஜியில் உள்ள திருவள்ளுவர் சிலை, நமது கலாச்சாரப் பிணைப்புகளுக்கு அழகான ஒரு சான்றாகும். திருவள்ளுவர் ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்கிறார். அவரது எழுத்துக்கள் உலகம் முழுவதும் உள்ள லட்சக் கணக்கானவர்களை ஊக்குவிக்கின்றன.” எனத் தெரிவித்துள்ளார்.

From around the web