அதிபர் உத்தரவை நீக்கிய சபாநாயகர்! பின் வாங்கியது ராணுவம்!!

 
South Korea

தென் கொரியாவில் அதிபர் யூன் சுக் யியோல் கொண்டு வந்த அவசரநிலை சட்டத்தை முறியடித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செவ்வாய் கிழமை நள்ளிரவு அவசரநிலை சட்டத்தை அறிவித்தார் அதிபர். அதைத் தொடர்ந்து பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் பாராளுமன்றத்தை நோக்கிச் சென்றனர்.

அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து ராணுவமும் பாராளுமன்றத்தை முற்றுகை இட்டது.

வெளியேபெரும் கூட்டம் கூடிய நிலையில், பாராளுமன்றக் கூட்டம் நடந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் அவரசநிலை சட்டத்தை ரத்து செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் ஊ வொன் சிக் நிறைவேற்றினார்.

பாராளுமன்றத் தீர்மானம் ராணுவத்துக்கு தெரியப்படுத்தப்பட்டதும், ராணுவம் பாராளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர். பாராளுமன்றத் தீர்மானத்தைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக அவசரநிலை சட்டத்தை அதிபர் யூன் சுக் யியோல் நீக்கும் வரையில், உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்திலேயே இருப்போம் என்று எதிர்க்கட்சியான லிபரல் டெமாக்ரட்டிக் கட்சியின் தலைவர் லி ஜே மியுங் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் இந்த அரசியல் திருப்பங்களால் நாட்டின் பணமதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இது அமெரிக்க பங்குச் சந்தை வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. தென் கொரிய அரசியலமைப்பு போர்க்காலத்தில் மட்டுமே அவசரநிலை சட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. தற்போது அத்தகைய சூழல் இல்லை என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலையற்றத் தன்மையை அமெரிக்கா உற்று நோக்கி வருவதாகவும், எப்போதும் தென் கொரிய அரசுடன் இணக்கமாக செயல்படுவோம் என்றும் அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

 

From around the web