அகண்ட அமெரிக்கா! மீண்டும் அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப்-ன் கனவுத் திட்டம்!!
அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமெரிக்காவின் எல்லையை விரிவாக்கும் பகீர் திட்டத்தைக் கூறியுள்ளார். ஏற்கனவே கனடா நாடு அமெரிக்காவின் 51 வது மாநிலம் என்று ட்ரம்ப் கூறிவரும் நிலையில், அது ஒரு கேலியா அல்லது சீரியஸ் ஆன விஷயமா, சாத்தியமா என்ற கேள்விகள் அமெரிக்காவிலும் கனடாவிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன,
இந்நிலையில் பனாமா கால்வாய் மீண்டும் அமெரிக்கா வசம் ஆகும். வடக்க்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள மிகப்பெரிய தீவான க்ரீன்லேண்ட் ஐ அமெரிக்காவுடன் இணைப்போம், கல்ஃப் ஆஃப் மெக்சிகோ என்பதை கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என பெயர் மாற்றுவோம் என அடுத்தடுத்த அதிரடிகளை இறக்கியுள்ளார் ட்ரம்ப்.
பனாமா கால்வாயை அமெரிக்கா 1999ம் ஆண்டு பனாமா நாட்டுக்கு தந்து விட்டது. பனாமா கால்வாய் வருமானம் அந்த நாட்டிற்கு பெரிய பொருளாதார ஆதாரமாகவும் உள்ளது. பனாமா கால்வாயை மீண்டும் அமெரிக்காவுக்கு திருப்பித் தரவேண்டும் என்று ட்ரம்ப் கோருகிறார். அதைப் பெறுவதற்காக ஆயுதம் அல்லது பொருளாதாரத் தடை என இரண்டையும் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியளிக்க முடியாது என்று அதிர்ச்சியூட்டும் வகையில் ட்ரம்ப் பதிலளித்துள்ளார்.
கல்ஃப் ஆப் மெக்சிகோ என்பது அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வளைகுடா ஆகும். இதன் வட பகுதியில் அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா, மிசிசிபி, அலபாமா, ஃப்ளோரிடா மாநிலங்களும், மேற்குப்பகுதியின் ஒரு புறம் டெக்சாஸும், வடக்குப் பகுதியில் ஃப்ளோரிடாவும் அமைந்துள்ளது. வளைகுடாவின் மேற்குப் பகுதியில் மெக்சிகோ இருக்கிறது. அமெரிக்காவின் இத்தனை மாநிலங்களை எல்லையாகக் கொண்டிருந்தாலும் இந்த வளைகுடா கல்ஃப் ஆஃப் மெக்சிகோ என்று அழைக்கப்படுகிறது. இதன் பெயரை கல்ஃப் ஆஃப் அமெரிக்கா என்று மாற்றப் போகிறேன் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடும் குளிர் நிலவும் க்ரீன்லேண்ட் தீவு டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்தத் தீவை விலைக்குத் தருமாறு டொனால்ட் ட்ரம்ப் கேட்டுள்ளார். இது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் அவசியமானது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். க்ரீன்லேண்ட் விற்பனைக்கு இல்லை என்று டென்மார்க் அறிவித்துள்ளது. நேட்டோ நாடுகளான நாம் பொருளாதார நெருக்கடிகள் மூலம் மோதிக்கொள்வது நல்லது இல்லை என்று டென்மார்க் பிரதமர் மெட் ஃப்ரெட்ரிக்சன் கூறியுள்ளார்.
அதிபராகப் பொறுப்பேற்றதும் ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள் வெறும் பேச்சா தானா? அல்லது உண்மையிலேயே இத்தகைய செயல்களைச் செய்வாரா என்று தெரியவரும். ஒரு வேளை இந்த முயற்சிகளை எடுத்தால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே புதிய பொருளாதார நெருக்கடிகள் உருவாகும்.