இலவச பயணச்சீட்டை தொலைத்த பெண்ணுக்கு அபராதம் விதித்த டிக்கெட் பரிசோதகர்!! வைரல் வீடியோ

 
Namakkal

நாமக்கல் அருகே பயணச்சீட்டு தொலைத்த பெண்ணிடம் 100 ரூபாய் அபராதம் கட்டச் சொல்லி வற்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்றான, சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. பல்வேறு விமர்சனங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மகளிரின் ஏகோபித்த ஆதரவுக்கும் இடையே தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் இதுவரை பயன்பெற்ற மகளிரின் எண்ணிக்கை 115 கோடி என்கிறது தரவுகள்.

bus-free-for-5years

ஆனாலும், ஒரு சில இடங்களில் போக்குவரத்து துறையில் பணிபுரியும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்கள் இலவசமாக பயணம் செய்யும் பெண்களை ஏளனமாக பேசுவது, மீன் வியாபாரிகளை பேருந்தில் ஏற்றாமல் சென்றது. சரியான நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி இறக்கி விடாமல் போனது என பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்த வீடியோக்கள் வெளியாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் பின்னர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் நேற்று பேருந்துகளை நிறுத்தி பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடம் எண் R12 என்ற அரசு பேருந்து சேலத்தில் இருந்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது.


அதில் பயணம் செய்த சித்ரா என்ற பெண் மகளிருக்கு இலவசம் என்ற பயணச்சீட்டை பெற்றுள்ளார். ஆனால், கவனக்குறைவாக பயணச்சீட்டை சித்ரா தொலைத்து விட்டதாக பரிசோதகரிடம் கூறியுள்ளார். அதற்கு 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என பரிசோதகர் வற்புறுத்தி உள்ளார். அந்த பெண் செய்வது அறியாமல் தவித்ததை அடுத்து அருகில் இருந்த பொதுமக்கள் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவசம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பயணச்சீட்டு தொலைத்திருந்தாலும் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச தானே என பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து பரிசோதகர் அங்கிருந்து சென்றுவிட்டார். பயணச்சீட்டு தொலைத்த பெண்ணிடம் 100 ரூபாய் அபராதம் கட்டச் சொல்லி வற்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

From around the web