கோவிலுக்கு சென்று திரும்பிய இளம்பெண்... லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே உயிரிழந்த பரிதாபம்

 
sneha

சென்னையில், லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த மாதவரம் பால்பண்ணை பேங்கர்ஸ் காலனியில் வசித்து வருபவர் யுவராஜ். இவரது மனைவி சினேகா (21). இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மதியம் தனது மனைவி சினேகா மற்றும் குழந்தையுடன் மோட்டார் பைக்கில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்றார்.

accident

சாமி தரிசனம் முடித்து பின்னர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், மாதவரம் ரவுண்டானா அருகே வளைவில் திரும்பிய போது பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சினேகா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் யுவராஜூம், அவரது 11 மாத கைக்குழந்தையும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சினேகாவின் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

dead

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநரான வேலூரை சேர்ந்த ராஜேஷ் (34) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் பைக் மீது மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கணவர் கண்முன்னே இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web