சூப்பர்! நீட் தேர்வில் அசத்திய சென்னை அரசுப் பள்ளி மாணவன்!!

 
Chennai

நீட் தேர்வு கடினமான தேர்வு அல்ல என்றும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என அரசுப் பள்ளி மாணவன் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் தேர்வு எழுதியிருந்தனர்.

இந்த தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 ஆகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்றாலும், கடந்த ஆண்டின் தேர்ச்சி சதவீதத்தைவிட சற்று குறைந்திருக்கிறது.

Neet

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி சதவீதம் 51.3 ஆகும். இதுவும் கடந்த ஆண்டைவிட குறைவு. மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த தேர்வில் 715 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என தகவல் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து அரசு பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் சுந்தரராஜன். இந்த ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு எழுதியுள்ளார். அதில் 720 மதிப்பெண்களுக்கு 503 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

chennai

இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் பயிற்சி மையம் செல்லாமல் ஆசிரியர் உதவியுடனும், பெற்றோரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வு கடினமான தேர்வு அல்ல என்றும் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என கூறிய சுந்தரராஜன், தோல்வி அடைந்த மாணவர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

From around the web