காதலனுடன் ப்ளஸ்-1 மாணவி மாயம்... அதிர்ச்சியில் கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து மனைவி தற்கொலை! சேலத்தில் பரபரப்பு 

 
parents

சேலத்தில் 16 வயது மகள் மாயமானதால் கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை மல்லி செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில் (47). லாரி ஓட்டுநரான இவருக்கு சுஜாதா (40) என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ப்ளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய மகள் உள்ளனர். இவரது மகள் சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-1 படித்து வருகிறார். இவர் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்தும் அவர் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை. 

poison

இந்த நிலையில் நேற்று முன்தினமும் மகள் யாருடனோ செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததை கண்ட தாய் சுஜாதா கண்டித்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் மதியம் மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீட்டில் தேடிய போது மகளை காணவில்லை.


இது குறித்து பெற்றோர் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்த நிலையில் மகள் காணாமல் போனதால் சுஜாதா மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதையடுத்து வீட்டில் வைத்திருந்த விஷத்தை குடித்த சுஜாதா, மீதி விஷத்தை சாப்பாட்டில் கலந்து கணவர் செந்திலுக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட அவர், சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதற்கிடையே விஷம் குடித்த சுஜாதாவும் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர். இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மயங்கி கிடந்த கணவன் மனைவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிசிச்சை அளித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுஜாதா பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடும் செந்திலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சுஜாதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து சுஜாதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், மாயமான மாணவி வாலிபர் ஒருவருடன் அடிக்கடி செல்போனில் பேசி உள்ளார். இது குறித்து பெற்றோர் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட வாலிபரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இனி மாணவியுடன் பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கி உள்ளனர்.

Salem

இருப்பினும் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளனர். இந்த நிலையில் மகள் திடீரென மாயமாகி உள்ளார். எனவே அவள் அந்த வாலிபருடன் ஓடி இருக்கலாம் என நினைத்து மனம் உடைந்த சுஜாதா கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு அவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து உள்ளார் என்று கூறினர். 


மகள் மாயமானதால் கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலம் அம்மாபேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web