டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிரடி மாற்றம்... இனி இது கட்டாயம்... சட்டப்பேரவையில் சட்ட மசோதா தாக்கல்!

 
PTR

அரசு பணியில் சேர தமிழில் தேர்ச்சி கட்டாயம் என்ற சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.

தமிழ்நாடு சட்டபேரவையின் நடப்புண்டு முதல் கூட்டத் தொடர் கடந்த 9-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கியது. ஆண்டின் முதல் சட்டபேரவை கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டம் இரங்கல் தீர்மானத்துடன் ஒத்தி வைக்கப்பட்டது.தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியது.

தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்கள் அதிகம் அமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதனை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. அதிலும் கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து மாநிலத்தவர்களுக்கும் டிஎன்பிஎஸ்சி எழுதும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

MKS

அந்த சட்டத்திருத்தத்தை மாற்றியமைக்கும் வகையில் , திமுக அரசு பொறுப்பேற்றதும் தமிழ் மொழி தேர்வை கட்டாயமாக்கியது. அதற்கேற்ப, 2016ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை சட்டசபையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமர்ந்திருந்தாலும் பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சட்ட திருத்தம் அதில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் மாநில பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்த இளைஞர்களை 100 சதவீதம் ஆள்சேர்ப்பு செய்வதை உறுதி செய்வதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தும் ஆட்சேர்ப்புக்கான அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

TNPSC

அதன்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணய ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் என அரசாணை சொல்கிறது. டிசம்பர் 2021 அன்று கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதனையடுத்து அரசுப் பணிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்ற சட்டம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

From around the web