நாமக்கல்லில் பெரியார் சிலை உடைப்பு... போலீஸ் தீவிர விசாரணை!!

 
Nammakal

நாமக்கல்லில் பெரியார் சிலை சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் நகரில் உள்ள சேலம்- மங்களம் பிரிவு சாலை அருகே கடந்த 1993-ம் ஆண்டு தந்தை பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலைகள் அதிமுக சார்பில வைக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு 3 சிலைகளுக்கும் மர்ம நபர்கள் காவித்துணி அணிவித்து சென்றதால் சிலைகளை பாதுகாக்கும் வகையில் கம்பி வலை பொருத்தப்பட்டது. இந்த நிலையில் 3 சிலைகளையும் சுற்றி வைத்திருந்த கம்பி வலைகள் பெயர்ந்த நிலையில், தந்தை பெரியார் சிலை நேற்று மாலை திடீரென சேதப்படுத்தப்பட்டிருந்தது.

Nammakal

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர்., பெரியார் சிலையை உடனடியாக துணிகளை கொண்டு மூடி மறைத்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சிலையை மர்ம நபர்கள் யாரேனும் சேதப்படுத்தினார்களா? அல்லது வாகனம் மோதியதில் சேதம் அடைந்ததா? என அங்கு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், அவ்வழியாகச் சென்ற மினி சரக்கு ஆட்டோ மோதியதில் பெரியார் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மினி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நல்லபாளையத்தை சேர்ந்த அருண் (32) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து நடத்திய விசாரணையில், சரக்கு வாகனத்தில் டீசல் பிடிக்க வந்த போது எதிர்பாரத விதமாக சிலை மீது வாகனம் மோதியதால் சிலை சேதமடைந்ததாக தெரிவித்தார்.

Nammakal

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதமடைந்த பெரியார் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது. ஆனால் தொடர்ந்து அந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web