ஆதார் - மின் நுகர்வோர் எண் இணைப்பு அவசியம் - மின்சார வாரியம் அதிரடி

 
EB-Aadhar

தமிழ்நாட்டில் மின்சார முறைகேட்டை தவிர்க்க ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைப்பது அவசியம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து வங்கி கணக்குகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசிடம் இருந்து மானியம் பெரும் அனைத்து மின் நுகர்வோர்களுக்கு தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

EB

மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் லிங்க் ஒன்றை மின்சாரத் துறை வடிவமைத்துள்ளது. தற்காலிகமாக சோதனை ஓட்ட முறைப்படி இந்த லிங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின் மோசடிகளை தவிர்க்க ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை சேர்க்க வேண்டும் எனவும் இதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு கொண்ட நுகர்வோர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான இலவச மின்சாரம், மானிய மின்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

TNEB

குறிப்பாக 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள், விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் 200 யூனிட் இலவசமாக பெறும் கைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் தங்களது மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் போன்ற மானியம் பெறாத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web