புதுக்கோட்டையில் தேர் திடீரென தலைகுப்புற கவிழ்ந்து விபத்து - 10 பேர் காயம்

 
Pudukottai

புதுக்கோட்டையில் புகழ்பெற்ற பிரகதாம்பாள் கோவில் தேர் கவிழ்ந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானமாகும். இந்த சமஸ்தான மன்னர்களின் குலதெய்வமாக இருப்பவர் திருக்கோகர்ணத்தின் அம்பாள் பிரகதாம்பாள். அருள்மழை பொழியும் அம்மனை வழிபட்ட பிறகே எந்த ஒரு காரியத்தையும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர் செய்து வந்தனர்.

அம்மனை போற்றிட சமஸ்தானம் சார்பில், அம்மனின் உருவம் பொறித்த காசினை வெளியிட்டது. ‘அரைப்பணம்’ என்ற அளவில் அம்மன் திரு உருவம் வெளியானதால், அப்பகுதி மக்களால் ‘அரைக்காசு அம்மன்’ என்றே அம்மன் அழைக்கப்பட்டு வருகிறார். ஆண்டுதோறும் விழா எடுத்து, பக்தர்கள் விரதமிருந்து இந்த அன்னையை புதுக்கோட்டை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

pudukottai

இக்கோவிலின் திருவிழா, கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாவது நாளான இன்று. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலை தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையத்தில் இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடினர். இந்த விபத்தில் தேருக்கு அருகில் நின்ற 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Pudukottai

தேரின் வடத்தை வேகமாக இழுத்ததால் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. மேலும் தேர் விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web