இந்த கிராமத்தில் இலவசமா தங்கலாம்.. இத்தாலியில் நாட்டில் உள்ள சூப்பரான சுற்றுலாதளம்!

 
Ollolai

இத்தாலின் சார்டினியா தீவில் பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் ஓலோலாய் கிராமம் அமைந்துள்ளது. அழகிய இந்த கிராமத்தில் வசித்து வந்த மக்கள் ஒவ்வொருவராக வெளியேறிய நிலையில், கடந்த 2018-ம் ஆண்டில் ஒரு வீடு ஒரு யூரோவுக்கு (இந்திய மதிப்பில் 88 ரூபாய்) விற்பனை மூலம் ஆச்சரியங்களுடன் செய்திகள் வலம் வந்தன. தற்போது வேறொரு புதிய திட்டத்தின் மூலமாக மீண்டும் உலக செய்திகளில் ஓலோலாய் கிராமம் இடம்பிடித்துள்ளது.

ஓலோலாய் கிராமத்தை உள்ளடக்கிய பகுதியின் மேயராக பிரான்செஸ்கோ கொழும்பு மற்றும் அவரது சகோதரர் லூகா ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் சுமார் 15 ஆண்டுகள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கியிருந்த நிலையில், தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அதிலும், மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில் ஒலோலாய் கிராமத்தை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர்.

Ollolai

ஓலோலாய் கிராமத்தில் இருந்தபடி, ஆன்லைன் மூலமாக பணியாற்றும் நபர்களுக்கு அங்கு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் என்று மேயர் கொழும்பு அறிவித்துள்ளார். இதுகுறித்து மேயர் கொழும்பு கூறுகையில், “கிராமத்து வாழ்க்கையையும், திறன் வாய்ந்த மக்களையும் இணைக்கும் விதமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஓலோலாய் கிராமத்தில் இருந்தும் கூட பணி செய்வது சாத்தியம் என்ற விஷயம் திறன் வாய்ந்தவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த நிலையில், ஓலோலாய் கிராமத்தில் தங்கியிருப்பதன் மூலமாக ஏற்படுகின்ற கலாச்சார மாற்றம் என்பது, அதிகரித்து வரும் டிஜிட்டல் பணிகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக அமையும்” என்று கூறினார்.

ஓலோலாய் கிராமத்தில் தங்கும்போது, கிராம மக்களின் மேம்பாட்டிற்காக மாதந்தோறும் 1 யூரோ வழங்கினால் போதுமானது. அதே சமயம், பணியாளர்களுக்கு தங்களுக்கு தெரிந்த திறன்களை அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு கற்பிக்க வேண்டும். தொழில்நுட்பம், மீடியா, நிதி, ரியல் எஸ்டேட், கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் என பல்துறை சார்ந்த பணியாளர்கள், நிபுணர்களுக்கு ஓலோலாய் கிராமத்தில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று உள்ளாட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இவர்களெல்லாம் துறை சார்ந்த விஷயங்களை உள்ளூர் மக்களுக்கு கற்பிக்க வேண்டும்.

Ollolai

தற்போது வரை, ஓலோலாய் கிராமத்தில் தங்கி பணிபுரிய உலகெங்கிலும் இருந்து 2,500 விண்ணப்பங்கள் வந்துள்ளனவாம். இதுகுறித்து மேயர் கொழும்பு கூறுகையில், “பெரும்பாலான கிராமப்புற மக்களை பொருத்தவரையில், இது கோழியா, முட்டையா என்ற சூழல்தான். ஆனால், எங்களைப் பொருத்தவரையில் வளர்ந்து வரும், அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றை கிராம மக்கள் எந்த அளவுக்கு தவற விடுகின்றனர் என்ற இடைவெளியை குறைக்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

From around the web