பிரபல தொழிலதிபர் பராக் தேசாய் மரணம்... தெரு நாய்களால் நடந்த விபரீதம்!
பிரபல தொழிலதிபர் பராக் தேசாயை தெரு நாய்கள் துரத்திய போது கீழே விழுந்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை தளமாகக் கொண்ட டீ நிறுவனம் வாஹா பக்ரி டீ குரூப். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பரக் தேசாய் (49). தொழிலதிபர் பரக் தேசாய்க்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். இதனிடையே, அகமதாபாத்தில் உள்ள தனது வீடு அருகே கடந்த 15-ம் தேதி மாலை பரக் தேசாய் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த தெருநாய்கள் பரக் தேசாயை விரட்டியுள்ளன. தெருநாய்களிடம் இருந்து தப்பிக்க பரக் தேசாய் வேகமாக ஓடியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய பரக் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பரக்கை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நாய்கள் துரத்தியதில் கீழே விழுந்த பரக் தேசாய்க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பரக் தேசாய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பரக் தேசாய் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பராக் தேசாயின் மரணம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.