ஒரே ஆண்டில் மாரடைப்பால் 32,457 பேர் மரணம்.. அரசு ஆவணம் அதிர்ச்சி தகவல்

 
Heart attack

இந்தியாவில் ஒரே ஆண்டில் மட்டும் 32 ஆயிரத்து 457 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக இந்தியாவில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதில் குறிப்பாக இளம் வயதினரின் மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை வெகுவாய் எகிறி வருகின்றன. மக்கள் மத்தியிலான அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், மருத்துவ நிபுணர்கள் இந்தப் போக்கை, கொரோனா பாதிப்பின் தாக்கத்துடன் இணைக்கின்றனர்.

‘இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்’ என்பது குறித்து தற்போது வெளியாகி உள்ள தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவு, 2022-ம் ஆண்டில் மட்டும் 32 ஆயிரத்து 457 நபர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கிறது. இது முந்தைய 2021-ம் ஆண்டில் பதிவான 28 ஆயிரத்து 413 மரணங்களுடன் ஒப்பிடுகையில் பெரும் பாய்ச்சலாக உயர்வு கண்டிருக்கிறது.

dead-body

மாரடைப்பு உட்பட அதே போன்ற திடீர் காரணிகளால் விளைந்த எதிர்பாரா மரணங்களும் புதிய எழுச்சியை கண்டுள்ளன. இந்த வகையில் 2022-ல் 56,450 மரணங்கள் நேர்ந்துள்ளன. இது முந்தைய 2021-ம் ஆண்டின் எண்ணிக்கையான 50,739 உடன் ஒப்பிடுகையில் 10.1 சதவீதம் உயர்வைக் குறிக்கிறது.

என்சிஆர்பி இவற்றை எதிர்பாராத திடீர் மரணம் என்பதாக வரையறுக்கிறது. வன்முறையைத் தவிர்த்த மாரடைப்பு, மூளையில் ரத்தக்கசிவு உள்ளிட்ட காரணிகளால் நிகழ்வதை, இந்த வகையிலான திடீர் மரணமாக சுட்டுகிறார்கள்.

Heart attack

இந்த திடீர் மரணங்கள் 2022-ல் மட்டும் 56,450 என்பதாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் வெகுவாய் உயர்வு கண்டிருப்பதாகும். இவற்றிலும் குறிப்பாக மாரடைப்பு என்பது மிகவும் கூர்மையான உயர்வைக் கண்டுள்ளது. மாரடைப்பு மரணங்களின் எண்ணிக்கை 2020-ல் 28,579 என்பதாகவும், 2021-ல் 28,413 என்பவதாகவும் இருந்து வந்தது, 2022-ல் 32,457 என்பதாக உயர்ந்துள்ளது.

இதய ஆரோக்கியத்தில் தொடரும் கொரோனா தாக்கத்தை புறக்கணிக்க முடியாது என்றாலும், விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழக்கமான சுகாதார பரிசோதனைகள் ஆகியவற்றின் அவசியத்தை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். கூடவே புகை, மது பழக்கங்களை கைவிடுவதோடு, உடற்பயிற்சியை தீவிரமாக பின்பற்றுவதும், சத்தான உணவூட்டத்தை பராமரிப்பதும் அவசியமாகிறது.

From around the web