இளைஞரை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கொடூர தாக்குதல்; வைரல் வீடியோ!!

 
Brutal-attack-leaving-worker-hanging-upside-down-on-tree

தொழிலாளியை மரத்தில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு சிறுவன் உள்பட 5 பேர் கடுமையாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உச்பத்தி கிராமத்தில் வசித்து வருபவர் மணீஷ் காரே. இதே மாவட்டத்தின் ரத்தன்பூர் பகுதியை சேர்ந்தவர் மகாவீர் சூர்யவன்ஷி, இவர் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 25-ந் தேதி இரவு மணீஷின் வீட்டுக்குள் மகாவீர் நுழைய முயன்றதை மணீஷ் பார்த்துள்ளார். எனினும், மகாவீர் தப்பியோடி விட்டார்.  மகாவீரை போலீசில் பிடித்து ஒப்படைத்த மணீஷ், தனது வீட்டுக்குள் புகுந்து திருட முயன்றுள்ளார் என போலீசில் தெரிவித்துள்ளார். ஆனால் மகாவீருக்கு எதிராக மணீஷ் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. இதனால், போலீசார் மகாவீரை எச்சரித்து அனுப்பி விட்டனர்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை இரவு மீண்டும் மணீஷ் வீட்டுக்கு வந்து, வெளியே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கி விட்டு தப்பியுள்ளார் மகாவீர்.

இதையடுத்து அடுத்த நாள் மணீஷ் தனது நண்பர்களான சிவராஜ் காரே மற்றும் ஜானு பார்கவ் ஆகியோருடன் சேர்ந்து மகாவீரை, செங்கல் சூளை அருகேயிருந்த மரம் ஒன்றில் தலைகீழாக கட்டி தொங்க விட்டு கம்பு குச்சிகளால் அடித்து, நொறுக்கியுள்ளனர். வலி பொறுக்காமல் மகாவீர் கால்களை பிடித்து மரத்தின் கிளைக்கு ஏறி வர முயற்சிக்கிறார்.

இந்த சம்பவத்தில் 15 வயது பீம் கேசர்வானி என்ற சிறுவனும் இணைந்து கொண்டான். அந்த பகுதியில் உள்ள சிலர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றும், தாக்குதல் தொடர்ந்து உள்ளது. அவர்களில் ஒருவர் மொபைலில் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் அதனை பரவ விட்டுள்ளார்.


இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மணீஷ் மற்றும் சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்து, அவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மகாவீரிடம் போலீசார் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின் மகாவீர் அந்த ஊரை விட்டு வெளியேறிய நிலையில், அவரின் இருப்பிடம் பற்றி அறியும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

From around the web