ஒரே 'சிரிஞ்ச்' மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி! மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

 
MP

மத்தியபிரதேசத்தில் ஒரே ‘சிரிஞ்ச்’ மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் கொரோனா பரவ தொடங்கியது. இதனை கட்டுபடுத்தும் விதமாக 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

vaccine

அதன்படி, மத்தியபிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. அப்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதை கவனிக்க சில பெற்றோரும் வந்திருந்தனர்.

அப்போது, தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர், ஒரே 'சிரிஞ்ச்' மூலம் அடுத்தடுத்து மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்படி 39 மாணவர்களுக்கு அவர் ஒரே 'சிரிஞ்ச்' மூலம் தடுப்பூசி செலுத்தினார். பெற்றோரின் எதிர்ப்பை தொடர்ந்து அவர் தப்பிஓடி விட்டார்.

MP

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி கோஸ்வாமி, பள்ளியில் ஆய்வு செய்தார். அவரிடம் பெற்றோர் முறையிட்டனர். தப்பி ஓடிய ஊழியர் ஜிதேந்திர அகிர்வார் மீது மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதாக கோபால்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தடுப்பூசி போடப்பட்ட 39 மாணவர்களை சுகாதார அதிகாரிகள் பரிசோதித்தனர். 19 பேர் உடல்நிலை இயல்பாக உள்ளது. மீதி 20 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web