அமெரிக்காவில் தமிழ் இலக்கியம்… அசத்தும் அமெரிக்க எழுத்தாளர்கள்!

அட்லாண்டா நகரில் ஒரே நாளில் ஐந்து தமிழ்ப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கத் தமிழர்கள் எழுதிய இந்த நூல்களை முனைவர் அமிர்த கணேசன் வெளியிட்டார். பிரதீபா பிரேம், சங்கர் தங்கவேலு, ராஜி ராமச்சந்திரன், பிரபா ஆனந்த், அனந்த சுப்ரமணியன் ஆகிய அமெரிக்கத் தமிழர்களின் படைப்புகள் இந்த விழாவில் வெளியிடப்பட்டன. பிரதீபா, சங்கர், ராஜி ஆகிய மூவரும் அட்லாண்டாவில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஐந்து நூல்கள் வெளியீடு
 

 

அமெரிக்காவில் தமிழ் இலக்கியம்… அசத்தும் அமெரிக்க எழுத்தாளர்கள்!ட்லாண்டா நகரில் ஒரே நாளில் ஐந்து தமிழ்ப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கத் தமிழர்கள் எழுதிய இந்த நூல்களை முனைவர் அமிர்த கணேசன் வெளியிட்டார்.

பிரதீபா பிரேம், சங்கர் தங்கவேலு, ராஜி ராமச்சந்திரன், பிரபா ஆனந்த், அனந்த சுப்ரமணியன் ஆகிய அமெரிக்கத் தமிழர்களின் படைப்புகள் இந்த விழாவில் வெளியிடப்பட்டன. பிரதீபா, சங்கர், ராஜி ஆகிய மூவரும் அட்லாண்டாவில் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளில் தன்னார்வ ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

ஐந்து நூல்கள் வெளியீடு

அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வெளிவரும் வசந்தமலர் இதழின் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் பிரதீபாவின் ”ஆழியில் அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி” கவிதை நூலை வசந்தமலர் ஆசிரியர் ஆதிமுத்து பெற்றுக் கொண்டார். தமிழ்ச் சங்க செயலாளராகவும் பணியாற்றி வரும் சங்கர் தங்கவேலுவின் “பெயல் நீர் சாரல்” கவிதை நூலின் பிரதியை லில்பர்ன் தமிழ்ப் பள்ளி தாளாளர் இரவி பழனியப்பன் பெற்றுக் கொண்டார். 

லட்சுமி தமிழ்ப்பள்ளியின் துணை முதல்வர்  ராஜி ராமச்சந்திரன் எழுதிய  “அம்மா வருவாயா?”  என்ற கட்டுரை நூலை, லட்சுமி தமிழ்ப்பள்ளியின் முதல்வர் லட்சுமி சங்கர் பெற்றுக் கொண்டார்.

பிரபா அனந்தின் “நல்லெண்ணங்கள் நாற்பது" என்ற கையேட்டு நூலை லலிதா சுவாமிநாதனும், அனந்தசுப்ரமணியனின் ”நான் கேட்டறிந்த பாரதி” கையேட்டு நூலை குமார் சுவாமிநாதனும் பெற்றுக்கொண்டனர்.

நூல்களை வெளியிட்ட முனைவர். அமிர்த கணேசன் மற்றும் பெற்றுக் கொண்ட சிறப்பு விருந்தினர்கள் நூலாசிரியர்களைப் பற்றி முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இரவி பழனியப்பன் பேசும் போது, “ அமெரிக்காவில் குழந்தைகள் தமிழ் பேசமாட்டார்களா என்ற நிலை இருந்தது. இப்போது நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ் பயின்று வருகிறார்கள். அட்லாண்டாவில் 34 ஆண்டுகளாக  லட்சுமி தமிழ்ப்பள்ளியையும், 25 வருடங்களாக லில்பர்ன் தமிழ்ப்பள்ளியையும் செயல்பட்டு வருகிறது.

அமெரிக்கத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துரைக்கும் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். இவர்களைப் போன்ற எழுத்தாளர்கள் ஏராளமானோர் உருவாக வேண்டும்,” என்றார். 

இந்த நூல் வெளியீட்டு விழா, அட்லாண்டா தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு “மைல் கல்” என்றார் தலைவர் குமரேஷ். அனைவரும் தமிழ் நூல்கள் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர் வசந்தமலர்க் குழுவிற்குத் தனது பாராட்டைத் தெரிவித்தார். வசந்தமலர் குழுவின் ஆசிரியரும் தமிழ் ஆர்வலருமான குமரேசன்மொழிப்பற்றையும் பண்பாட்டின் மீதுள்ள மரியாதையையும் இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வது மிக அவசியம் என்றார்.

முனைவர் அமிர்த கணேசன் சிறப்புரை

“எழுத்தாளர் என்பவர் எழுத்தை ஆள்பவராக இருத்தல் வேண்டும். என்னுடைய முதல்நூலை வெளியிடத் தடைகள் பல கடந்து வந்தேன். அத்தகைய தடைகளைப் போக்குவதற்காகவே  “ஒரு துளிக் கவிதை” அமைப்பு தொடஙக்ப்பட்டது. புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகிறோம். இந்த அமைப்பின் மூலம் வெளியிடப்பட்ட இரண்டு புத்தகங்கள் ஐக்கிய நாடுகள்
சபைக்குப் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.

இங்கு வெளியிடப்பட்ட நூல்கள் சிலவற்றை முன்னதாகவே வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ராஜி எழுதியுள்ள   ‘அம்மா வருவாயா?‘ மிகவும் அருமையான பயனுள்ள கட்டுரைகளும், அனுபவத் துணுக்குகளும் நிறைந்தது. சங்கரின் ‘பெயல் நீர் சாரல்’ காதலும் வீரமும் கரம் கோர்த்த கவிதைகள். பிரதீபாவின்  ‘ஆழியிலே அமிழ்ந்த என் அழகிய மரப்பாச்சி’ நூலுக்கு தலைப்பே முத்தாய்ப்பாக உள்ளது. 

இங்கே பலவித வண்ணங்களாய் மின்னும் தமிழ்ச் சங்கங்கள் அனைத்தும் வானவில்லாய் ஒன்றிணைந்து,  வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) வில் கூட்டாகச் செயல்பட வேண்டும். பன்னாட்டு எழுத்தாளர் பேரவை அமைக்க வேண்டும். அனைவரும் நிறைய தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்க வேண்டும், நிறைய புத்தகங்கள் எழுதவேண்டும்.

எளிமையான பல வழிகளில் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க முடியும். இளைய தலைமுறையினர் பலர் எழுத்தாளர்களாக உருவாக வேண்டும். மூத்த தலைமுறையினர் அவர்களுக்கு வழிகாட்டியாய் இருந்து ஊக்கம் அளிக்க வேண்டும்,” என்று உரையாற்றினார் முனைவர் அமிர்தகணேசன்.

நூலாசிரியர்களுக்கு அமிர்த கணேசன் பொன்னாடை அணிவித்தார். முனைவர் அமிர்த கணேசன், தமிழ்ச் சங்கத் தலைவர் குமரேஷ் மற்றும் லில்பர்ன் தமிழ்ப்பள்ளி தாளாளர் இரவி பழனியப்பனுக்கும் நூலாசிரியர்கள் மலர்ச்செண்டு வழங்கி, ஊக்கமும் வாய்ப்பும் தந்தமைக்காக நன்றி பாராட்டினர்.

விழாவில் பங்கேற்றவர்களுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களுக்கும் ஜெயா மாறன் நன்றியுரை வழங்ககினார். இதோ, தமிழ்த்தாயின் இலக்கியப் பொன்னாடையில் ஐந்து புது நூல்கள்.  “திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்ற பாரதியின்கனவு நனவாகும் நாள் தொலைவில் இல்லை.

தமிழ் வளர்ப்போம்! வளம் பெறுவோம்!

– கிருத்திகா நடராஜன், அட்லாண்டா, யு.எஸ்.ஏ.

From around the web