2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு…

குருபெயர்ச்சி பலன்கள் ( 4-11-2019 முதல் 20-11-2020) பொதுக் குறிப்புகள் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி குரு 4-11-2019 அன்று விருச்சக இராசியிலிருந்து தனுசு இராசிக்கு இடம் பெயர்கிறது. பொதுவாக குரு ஒரு இராசியில் ஒராண்டு காலம் சஞ்சரிக்கும். இதில் ஏறத்தாழ 4 மாதங்கள் வக்ர கதியில் இருக்கும். இந்த முறை குரு சஞ்சாரத்தில் 29-3-2020ல் மகர இராசிக்கு செல்கிறது. பின் 15-5-2020ல் குரு வக்ரமடைகிறது. பின் 30-6-2020ல் மீண்டும் வக்ர கதியில் தனுசு இராசிக்குள் நுழைகிறது. 14-9-2020
 

குருபெயர்ச்சி பலன்கள் ( 4-11-2019 முதல் 20-11-2020)

2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு…

பொதுக் குறிப்புகள்

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி குரு 4-11-2019 அன்று விருச்சக இராசியிலிருந்து தனுசு இராசிக்கு இடம் பெயர்கிறது. பொதுவாக குரு ஒரு இராசியில் ஒராண்டு காலம்  சஞ்சரிக்கும். இதில் ஏறத்தாழ 4 மாதங்கள் வக்ர கதியில் இருக்கும். இந்த முறை குரு சஞ்சாரத்தில்  29-3-2020ல் மகர இராசிக்கு செல்கிறது. பின் 15-5-2020ல் குரு வக்ரமடைகிறது. பின் 30-6-2020ல் மீண்டும் வக்ர கதியில் தனுசு இராசிக்குள் நுழைகிறது. 14-9-2020 அன்று குரு நிவர்த்தி அடைகிறது.

மீண்டும் 20-11-2020ல் குரு மகர இராசிக்குள் பிரவேசிக்கிறது. குருவானது, 4-11-2019ல் இருந்து 4-1-2020 வரையிலும் மூலம் நட்சத்திரத்திலும், 7-3-2020 வரை பூராடம் நட்சத்திரத்திலும் அதன் பின் உத்திராட நட்சத்திரத்தில் 20-7-2020 வரை சஞ்சரிக்கிறது.  அதன் பிறகு, 30-10-2020 வரை பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. மீண்டும் 30-10-2020 லிருந்து உத்திராடம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. அதன் பின் 20-11-2020 அன்று குருவானது மகர இராசிக்குச் செல்கிறது.

இந்த குருபெயர்ச்சியைப் பற்றி பொதுவாகச் சொல்லும் பொழுது, குரு தனது சொந்த வீடான தனுசுக்குள் கால் எடுத்து வைக்கிறது. தனுசு இராசி மண்டலத்தில் 9 வது வீடாகும். இதுவே குருவிற்கு மூலத்திரிமகான வீடாகும். பொதுவாக உலகத்தில் நல்லவைகள் தீமைகளை விட அதிகமாகவே இருக்கும். தர்மகாரியங்கள் ஆன்மீகம் போன்றவைகள் அதிகமாகும். அயல்நாட்டு உறவுகள் சாதகமான நிலையில் இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் நன்மை அடையும். கோயில் திருப்பணிகள் நடைபெறும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். 

இனி 12 இராசிகளுக்கான குருபெயர்ச்சி பலன்களைப் பார்ப்போம்.

மேஷம் ( அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

இதுவரை அஷ்டமத்து ராசியான விருட்சகத்தில் சஞ்சரித்த குரு பல இன்னல்களைத் தந்து வந்தது. இப்போது அந்த துன்பங்களிலிருந்து விடுபட குருவானது 9வது இடமாகிய பாத்திய ஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. பொதுவாக 9வது வீடு, எல்லாவிதமான நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் தரக்கூடியது. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நன்மை தரும். அயல்நாட்டு பிரயாணம் ஏற்படும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்கும். ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும். 

குருவின் பார்வை பலன்கள்

9ம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு இராசியைப் பார்ப்பதினால் உடல்நலம் நன்றாக இருக்கும். பெயர், புகழ் கிடைக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். முயற்சிகள் எல்லாம் வெற்றியைத் தரும். 

குரு 5ம் வீட்டைப் பார்ப்பதினால் சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் தொல்லைகள் முடிவுக்கு வரும். காதல் வயப்பட்டோர் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். சினிமா, சங்கீதத் துறையினர் பெரும் புகழும் பணமும் சம்பாதிப்பார்கள். பங்குச் சந்தை லாபகரமாக நடைபெறும். 

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. மூலம் கேதுவுடையது. எனவே கேது சாரத்தில்  கேது நன்மைதரும் வீடுகளிலிருந்து நன்மையான பலன்களைத் தரும். பொதுவாக ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். அயல்நாட்டு பிரயாணம் உண்டாகும். 

குரு பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும், அதன் பின் 20-7-2020லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இந்த காலக் கட்டத்தில் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சில ஆசைகள் நிறைவேறும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்திலிருப்போர்க்கு ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உயர்கல்விக்கான கடனுதவி கிடைக்கும். திருமணம் நடைபெறும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். 

29-3-2020லிருந்து 30-6-2020 வரையிலும், அதன் பின் 30-10-2020லிருந்து 20-11-2020 வரையிலும் சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. இந்த காலக் கட்டத்தில் கடன்கள் தீர்ந்து போகும். குழந்தைகளினால் நன்மை கிடைக்கும். லாட்டரி, ரேஸ், மூலம் பணம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியும் கேளிக்கைகளும் நிறைந்து காணப்படும். 

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர இராசியில் வக்ர கதியில் இருக்கிறது;. இந்த காலக் கட்டத்தில் தொழில் சிறப்பாக நடைபெறும். அயல்நாட்டு விவகாரங்கள் சாதகமான நிலையில் இருக்காது. தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படும். உயர்கல்வியில் பின்னடைவு உண்டாகும். 

30-6-2020 முதல் 14-9-2020 வரை குரு தனுசுவில் வக்ர கதியில் சஞ்சரிக்கிறது. இந்த காலக் கட்டம் சோதனை நிறைந்ததாக இருக்கும். முயற்சிகளில் தோல்வி காணப்படும். மனக்கவலை அதிகரித்து காணப்படும். உடல்நலம் பாதிக்கும். வாகனம் ஓட்டும் போது மிகுந்த கவனம் தேவை. ஏற்றுமதி, இறக்குமதி தொழில் நஷ்டத்தில் இயங்கும். அயல்நாட்டு பிரயாணம் தடைபடும். வீண் பணவிரயம் உண்டாகும். 

பரிகாரம்: செவ்வாய்கிழமை திருச்செந்தூர் முருகனை வழிபட்டு வந்தால் செல்வம் மேலும் மேலும் அதிகரிக்கும்,

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருக சிரிடம் 1, 2 ம் பாதம்)

இது வரை ஏழாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு இப்போது எட்டாம் வீட்டிற்கு காலடி எடுத்து வைக்கிறது. பொதுவாக எட்டாம் வீடு விரும்பத்தகாத வீடாக இருந்த போதிலும், குரு 11மிடமாகிய லாபங்களைத் தரும் அதிபதி என்பதை மறந்து விட முடியாது. எட்டாமிடம் மனக்கவலை, காரியத் தடை, விபத்து, அறுவை சிகிச்சை, பணத்தை திருப்பிச் செலுத்துதல், நன்கொடை ஆகியவற்றை குறிக்கிறது. எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு உழைக்காத பணம் வந்து சேருவதை குறிக்கிறது.  இன்சுரன்ஸ், பிஎப் பணம் கிடைக்கும். லாட்டரி, ரேஸ்களில் பணம் கிடைக்க வாய்புண்டு. நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. மூத்த சகோதரருக்கு உடல்நலம் பாதிக்கும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

குருவின் பார்வை பலன்கள்

குரு எட்டாமிடத்திலிருந்து 5ம் பார்வையாக 12ம் வீட்டையும் 7ம் பார்வையாக 2ம் வீட்டையும் 9ம் பார்வையாக 4ம் வீட்டையும் பார்க்கிறது. குரு 12ம் வீட்டை பார்ப்பதினால் சுபவிரயம் உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். சில முதலீடுகள் செய்ய நேரிடும். புது சூழ்நிலையில் வாழும் சந்தர்ப்பம் கிடைக்கும்.  2ம் வீட்டை பார்ப்பதினால் உழைக்காத பணம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். நிதிநிலை உயரும்.

4ம் வீட்டை பார்ப்பதினால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட், வாகனத் தொழில் சிறப்பாக நடைபெறும். பயிர்த் தொழில் நல்ல லாபம் தரும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாயாரினால் நன்மைகள் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. ஜாதகத்தில் கேது நல்ல இடத்தில் இருந்தால் நன்மையான பலன்களைத் தரும். பொதுவாக காரியத் தடைகள் உண்டாகும். பிரயாணங்களில் தடைகள் காணப்படும். கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியும். 

20-7-2020லிருந்து குரு பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும், அதன்பின் 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடனுதவி கிடைக்கும். 

29-3-2020லிருந்து 30-6-2020 வரையிலும் அதன்பின் 30-10-2020லிருந்து 20-11-2020 வரையிலும் சூரியனுடைய நட்சத்திரமாகிய உத்திராடத்தில் குரு சஞ்சரிக்கிறது. இந்த காலத்தில் வீடு, வாகனம் வாங்க முடியும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பயிர்த் தொழில் லாபகரமாக இருக்கும்.

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இப்போது மனக்கவலை அதிகரித்து காணப்படும். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உடல்நலம் பாதிக்கும்.

30-6-2020 முதல் 14-9-2020 வரை குரு தனுசு ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் தடைபட்டு நின்றிருந்த திருமணம் நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். நண்பர்கள் ஓடோடி வந்து உதவி புரிவர். 

பரிகாரம்வெள்ளிக்கிழமை தோறும் பராசக்தியையும் மகாலஷ்மியையும் வழிபட்டு வந்தால் செல்வம் வந்து சேரும்.

மிதுனம் (மிருக சீரிடம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

இது வரை 6ம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு இப்போது 7மிடத்திற்குச் செல்கிறது. இதுவரை கடன்கள், வழக்குகள், நோய்கள் என்று எல்லா விதத்திலும் கெடுதல்கள் செய்த குரு, இப்போது 7மிடமாகிய சுப வீட்டிற்கு வருகிறது. இதுவரை தடைபட்டு நின்றிருந்த திருமணம் நடைபெறும். பிரிந்து போன கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேருவார்கள். கூட்டு வியாபாரம் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். மதிப்பு செல்வாக்கு உயரும். புதிய பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். முயற்சிகளில் எளிதாக வெற்றி கிடைக்கும்.

குருவின் பார்வை பலன்கள்

7மிடத்தில் சஞ்சரிக்கும் குரு 5ம் பார்வையாக 11ம் வீட்டைப் பார்க்கிறது. இதனால் பணவரவு பலவகைகளில் வரும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். கூட்டு வியாபாரம் நல்ல லாபம் தரும். பதவிகள் தேடி வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். ஆசைகள் நிறைவேறும். தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். 

குரு 7ம் பார்வையாக இராசியைப் பார்ப்பதினால் மதிப்பு செல்வாக்கு உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். அரசியலில் இருப்போர் பொதுமக்களின் பேராதரவைப் பெறுவர். 

குரு 9ம் பார்வையாக 3ம் வீட்டை பார்ப்பதினால் இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் இடமாற்றமும் உண்டாகும். எடிட்டிங், எழுத்துத் தொழில், விளம்பரத் தொழில், தரகர் தொழில் லாபகரமாக நடைபெறும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். பிரயாணம் நன்மை தரும். 

குரு சஞ்சரிக்கும் சாரப்பலன்கள்

குரு 4-1-2020 வரை மூல நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறது. மூலம் கேதுவினுடையது. எனவே கேதுவுக்கு சொந்த வீடு இல்லாமையால் ஜாதகத்தில் கேது இருக்கும் வீட்டைப் பொறுத்தே பலன் அமையும். நன்மையான வீடுகளில் நன்மை தரும். 

குரு பூராட நட்சத்திரத்தில் 7-3-2020 வரையிலும் அதன்பின் 20-7-2020லிருந்து 30-10-2020 வரையிலும் சஞ்சரிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் சினிமா, சங்கீதம் முன்னேற்றமடையும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் போய் முடியும். பங்குச் சந்தை நல்ல லாபம் தரும். கடன்கள் தீர்ந்து போவதினால் மகிழ்ச்சி உண்டாகும். முதலீடுகள் நல்ல லாபம் தரும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் விலகும். 

29-3-2020லிருந்து 30-6-2020 வரையிலும்  அதன்பின் 30-10-2020லிருந்து 20-11-2020 வரையிலும் சூரியனுடைய நட்சத்திரமான உத்திராடத்தில் சஞ்சரிக்கிறது. சூரியன் மூன்றாமிடத்து அதிபதி ஆவதினால், குடும்பத்தில் பாகப்பிரிவினை உண்டாகும். இடமாற்றம் உண்டாகும். பிரயாணம் ஏற்படும். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். நேர்முகத் தேர்வில் வெற்றி கிடைக்கும். 

குருவின் வக்ர கதியின் பலன்கள்

குரு 15-5-2020 முதல் 30-6-2020 வரையில் மகர ராசியில் வக்ர கதியில் இருக்கிறது. இந்த காலக் கட்டத்தில் உடல்நலக்குறைவு உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகள் காணப்படும். கணவன் மனைவி உறவு பாதிக்கப்படும். வேலை தேடுவோர்க்கு வேலை கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மந்தமான நிலையில் நடைபெறும். கூட்டு வியாபாரத்தில் குழப்பம் உண்டாகும்.

30-6-2020 முதல் 14-9-2020 வரை குரு தனுசு இராசியில் வக்ர கதியில் இருக்கிறது. காரியத் தடைகள் உண்டாகும். சிலருக்கு பதவி பறிபோகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தடைபடும். மதிப்பு, செல்வாக்கு பாதிக்கப்படும். நல்லதே செய்தாலும் கெட்ட பெயர் உண்டாகும். ஜாதகத்தில் குரு திசையோ, குரு புத்தியோ நடைபெற்றால் மிகவும் மோசமான பலன்களையே தரும். 

பரிகாரம்புதன்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கான குரு பெயர்ச்சிப் பலன்கள் நாளை வெளிவரும்.

2019-20ம் ஆண்டுக்கான குருபெயர்ச்சி பலன்கள் – மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு…
– ஜோதிட விஷாரத் அ.பாலசேகர், எம்.எஸ்.சி(ஜோதிடம்)
தொடர்புக்கு : 98846 20941,  abalasekar@hotmail.com 

 

From around the web