2.0 விமர்சனம்

நடிகர்கள் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், அடில் ஹுசைன், ஐசரி கணேஷ் ஒளிப்பதிவு : நீரவ்ஷா இசை : ஏ ஆர் ரஹ்மான் தயாரிப்பு : சுபாஷ் கரண் இயக்கம் : ஷங்கர் படத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பு இந்திய சினிமாவை உலகமே கொண்டாடும் அளவுக்கு நிஜமான சர்வதேச தரத்தில் ஒரு சயின்ஸ் பிஃக்சன் படம் தந்த இயக்குநர் ஷங்கர், இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோ ரஜினிகாந்த் ஆகியோரைப் பாராட்டி விடுவதுதான் இந்தப் படத்திற்கு
 

 

2.0 விமர்சனம்டிகர்கள் : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், அடில் ஹுசைன், ஐசரி கணேஷ்

ஒளிப்பதிவு : நீரவ்ஷா

இசை : ஏ ஆர் ரஹ்மான்

தயாரிப்பு : சுபாஷ் கரண்

இயக்கம் : ஷங்கர்

படத்தைப்பற்றி பேசுவதற்கு முன்பு இந்திய சினிமாவை உலகமே கொண்டாடும் அளவுக்கு நிஜமான சர்வதேச தரத்தில் ஒரு சயின்ஸ் பிஃக்சன் படம் தந்த இயக்குநர் ஷங்கர், இந்திய சினிமாவின் சூப்பர் ஹீரோ ரஜினிகாந்த் ஆகியோரைப் பாராட்டி விடுவதுதான் இந்தப் படத்திற்கு நாம் செய்யும் முதல் மரியாதை.

படத்தின் கதை உலகளாவியது. மனிதனுக்கு மட்டுமல்ல, இந்த மண்ணில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் இந்த பூமியின் மீது சம உரிமையுள்ளது என்பது தான் 2.0 வின் மையக் கருத்து.

ஒரு அதிகாலை நேரம். ஒரு முதியவர் செல்போன் டவரில் ஏறி தூக்கில் தொங்குகிறார், அடுத்த நாள் நகரில் உள்ள அத்தனை செல்போன்களும் மாயமாகின்றன. செல்போன் சேவைத்தரும் ஒரு கார்ப்பரேட் முதலாளி கொல்லப்படுகிறார். செல்போன் கடை உரிமையாளர் நினைத்துப் பார்க்க முடியாத கோரத்துடன் கொல்லப்படுகிறார். ஏன் இப்படி நடக்கிறது, எந்த சக்தி இப்படி எல்லாம் செய்கிறது என்பதை கண்டுபிடிக்கும் பொறுப்பை விஞ்ஞானி வசீகரனுக்கு கொடுக்கிறது அரசு. அவர் எப்படி கண்டுபிடிக்கிறார், அந்த மர்ம சக்தியிடம் இருந்து மக்களை எப்படி காக்கிறார் என்பது அதிரடி ஆக்ஷன் க்ளைமாக்ஸ்.

படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி என்று ஆரம்பிக்கும் அந்த டைட்டிலுக்காகவே ஷங்கருக்கு காலம் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். அந்த டைட்டில் காட்சி தொடங்கி கடைசி காட்சியில் குட்டி 3.0 நம்மை நோக்கி பாயும் வரை திரையில் கட்டிப்போடுகிறார்கள் இயக்குநர் ஷங்கரும் சூப்பர்ஸ்டார் ரஜினியும். ஹாலிவுட் படங்களில் கூட அனுபவித்திராத 3D எபக்ட்டை இந்த படத்தில் தந்திருக்கிறார்கள். ஆரம்ப காட்சியிலிருந்து கடைசி வரை நாம் பார்ப்பது இந்தியப் படம்தானா என கிள்ளிப் பார்த்துக்கொள்ள வைக்கிறது காட்சிகளின் நேர்த்தி.

படத்தின் சூப்பர் ஹீரோ, ஜீவன், சுவாரஸ்யம் எல்லாமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். டாக்டர் வசீகரம், சிட்டி, 2.0 மற்றும் 3.0 என நான்கு வேடங்களில் பட்டையை கிளப்பியிருக்கிறார். “இந்த ஒன்னு ரெண்டுன்னு சின்ன பசங்க விளையாட்டெல்லாம் என்கிட்ட வச்சுக்காத, நான் தான் எப்பவும் நம்பர் ஒன் சூப்பர் பவர்” என ஒரு காட்சியில் பேசுவார் ரஜினி. நேற்று இன்றல்ல நாளையும் அது தான் உண்மை. எந்திரனை விட இந்தப் படத்தில் இன்னும் வசீகரமாக தெரிகிறார் டாக்டர் வசீகரன். சிட்டி, 2.0, குழந்தைகளின் செல்லக்குட்டி 3.0 என அத்தனை பரிமாணங்களில் தன்னை மிஞ்சியவர் எவரும் இல்லை என புரிய வைத்திருக்கிறார் ரஜினி.

இடைவேளைக்குப் பிறகு வரும் அக்ஷய்குமார் மறைந்த பறவைகளின் விஞ்ஞானி சலீம் அலியை நினைவு படுத்துகிறார். தனது பங்களிப்பை கச்சிதமாக செய்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு சிறப்பு ஏமி ஜாக்சன். அவரைப் பார்க்கும் முதல் காட்சியில் அவரது அழகில் மயங்கி வழியும் அந்த மாணவனின் நிலை தான் படம் பார்க்கும் அத்தனை பேருடைய நிலையும். அவரது பாத்திரப்படைப்பும் அர்த்தமுள்ளது, கலகலப்பானது. மிக இயல்பாக நடித்து பாராட்டை பெறுகிறார். முதல் பாகத்தில் வந்த ஐஸ்வர்யா ராயை விட இவர் பிரமாதம்.

2.0 விமர்சனம்

அமைச்சராக வரும் அடில் ஹுசைன், செல்போன் கடைக்காரர் ஐசரி கணேஷ், அமைச்சரின் உதவியாளர் மயில்சாமி என குறைந்த நட்சத்திரங்கள் தான், ஆனால் சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகிறார்கள். டாக்டர் போராவின் மகனாக வரும் சுதன்ஷு பாண்டே ஏதோ பெரிதாக செய்யப்போவதாக பார்த்தால் அம்போ என பட்சி ராஜனுக்கு பலியாகிறார்.

படத்தை முழுமையான விஞ்ஞானப் படமாகவே காட்டியிருக்கலாம் ஷங்கர். ஜெயமோகன் சகவாசமோ என்னமோ தேவையில்லாத சில சமாச்சாரங்கள்.

தொழில்நுட்ப தரத்தில் இந்த படம் ஹாலிவுட்டில் இதுவரை வந்த எந்த பிரம்மாண்டப் படத்திற்கும் குறைந்தது இல்லை. நீரவ் ஷா ஒளிப்பதிவு, ரஹ்மானின் இசை ஆயிரக்கணக்கான தொழில் நுட்ப கலைஞர்களின் விஎப்எக்ஸ் ஜாலம் இவை அனைத்தும் படம் பார்ப்பவர்களுக்கு பதிய அனுபவத்தைத் தருகிறது.

மிகையில்லை, இந்திய சினிமாவின் பெருமை 2.0!

Rating : 4.5/5.0

From around the web