என்னதான் நடந்தது?..1971 சேலம் மாநாடு ஒரு பார்வை

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசும் போது , வேண்டுமென்றே சில பொய்களை கூறி இருப்பதை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் அவருக்கு கண்டனக் குரல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. 1971 இல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள் . அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க அரசுக்கு பெரிய கெட்ட பெயர்
 

என்னதான் நடந்தது?..1971 சேலம் மாநாடு ஒரு பார்வைண்மையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசும் போது , வேண்டுமென்றே சில பொய்களை கூறி இருப்பதை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் அவருக்கு கண்டனக் குரல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. 

1971 இல் சேலத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள் . அதை யாரும் செய்தித்தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார். இதனால், அப்போதைய தி.மு.க அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். அந்த இதழை , மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். அது 50 ரூபாய்க்கு பிளாக்கில் விற்றது என்று கூறியிருந்தார்.

மேலே ரஜினி கூறியுள்ள கருத்து எந்த அளவிற்கு பொய்யானது என்பதை அறிய , 1971 ஆம் ஆண்டு சேலத்தில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 1971 ஆம் ஆண்டில் தான் நாடாளுமன்றத் தேர்தலுடனேயே தமிழகச் சட்டமன்றத்திற்கும்  தேர்தல் நடைபெற இருந்தது.

இந்தத் தேர்தலில் இந்திராகாந்தியுடன் திமுக கூட்டணியில் இருந்தது. தமிழக சட்டமன்றத்தில் எந்த ஒரு தொகுதியையும் இந்திரா காங்கிரசுக்கு தராமல், நாடாளுமன்றத்தில் மட்டும் சுமார் 10 இடங்களை இந்திரா காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து தேர்தலை சந்தித்தனர்.

அந்த ஆண்டில் தான் 23.01.1971 மற்றும் 24.01.1971 அன்று சேலம் போஸ் மைதானத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. தந்தை பெரியார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கி மூடநம்பிக்கை ஒழிப்புக்கான அரியதோர் விளக்கம் கூறி, அறிவுரையாற்றினார். தேர்தல் சமயம் என்பதால், திமுக போன்ற கட்சிகளின் தலைவர்களையோ, அமைச்சர்களையோ கூட மாநாட்டிற்கு அழைக்கவில்லை. திராவிடர் கழகத்தவரும், பகுத்தறிவாளர் கழகத்தினருமே பங்கேற்ற மாநாடாக அம்மாநாடு நடைபெற்றது.

இரு நாட்கள் நடந்த  மாநாட்டில் முக்கியமான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

1) மத உணர்ச்சியைப் புண்படுத்தும் இ .பி.கோ சட்டப் பிரிவை எடுத்துவிட வேண்டும்.
2) கடவுள் மதத்துக்கு அரசின் பாதுகாப்பு கூடாது
3) ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமாக்க கூடாது.
4) கடவுள்,மதம், ஜாதி, மொழி ,தேசம் ஆகியவற்றில் பற்றுக் கூடாது.
5) சுப்ரீம் கோர்ட்டை எடுத்து விட வேண்டும்
6) பார்ப்பனர்களை பிராமணர் என்று சொல்லக் கூடாது.
7) பார்ப்பனப் பத்திரிக்கைகளை தமிழர்கள் கண்டிப்பாக பகிஷ்கரிக்க வேண்டும்
8) இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல
9) நாம் இந்துக்கள் அல்ல ; வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்துக்கள் அல்ல என்று கூற வேண்டும் .
10) ஜாதியை ஒழிப்பது என்றால் பார்ப்பானை துவேஷிக்க வேண்டும்.

போன்ற முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 24.01.1971 மாநாட்டின் இரண்டாவது நாள் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. சேலம் ராஜேந்திரா சத்திரத்திலிருந்து புறப்பட்ட இந்த மிகப் பெரிய ஊர்வலத்தில், மூடநம்பிக்கையை விளக்கிக் காட்டும் தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், போன்றவை நூற்றுக்கணக்கான கழகத் தோழர்களாலும் , தாய்மார்களாலும் பொதுமக்களுக்குச் செய்து காட்டப்பட்டன. ஒன்றரை மைல் நீளமுள்ள இந்த ஊர்வலத்தில் இராமாயண கதாபாத்திரங்களான இராமன், சீதை போன்றவர்களைக் கடவுளாகக் கருதும் பித்தலாட்டமும் , ஒவ்வொரு கடவுளின் பிறப்பு, செயல்கள் பற்றி இதிகாச புராண ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட அருமையான ஓவியங்கள் தனித்தனி வண்டிகளில் பொதுமக்களுக்கு விளக்கும் விதமாக எடுத்துவரப்பட்டது.

இந்த பேரணிக்கு தடைக்கோரி கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தை  ஜனசங்கம் (இன்றைய பாஜக – அப்போது அந்த கட்சி அரசியலில் இல்லை )அறிவித்தது. சேலத்தில் அவர்கள் வெகு சிலர் தான் இருந்தனர். அன்றைய திமுக அரசு கறுப்புக்கொடி காட்ட அனுமதித்தது. பொதுவாக மிக பிரமாண்டமான ஊர்வலம் வரும்போது, இப்படியொரு முயற்சி என்றால், கறுப்புக்கொடி காட்ட வருபவர்களை முன்கூட்டியே கைது செய்தோ அல்லது அவர்கள் புறப்படும் இடத்தில் கைது செய்தோ, ஊர்வலம் முடிந்த பிறகு , மாலையிலோ இரவிலோ விடுதலை செய்வது தான் எங்கும் நடைமுறை.
 
ஆனால் திமுக, அன்று அது தேர்தல் நேரம் என்பதாலோ ஜனநாயக கண்ணோட்டத்துடனோ கறுப்புக்கொடி காட்ட ஊர்வலப் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தினை ஒதுக்கித்தந்தார்கள். 50 பேர் குழுமி போலீசார் வளையத்திற்குள்ளே இருந்தபடி கருப்புக்கொடியை அய்யா ஊர்வலத்தில் வரும்போது காட்டினர் . ஊர்வலம் மிக நீளம் , அய்யா வரும் பகுதி தாண்டும் நிலையில் , திடீரென்று கறுப்புக்கொடி காட்டுவோர் பகுதியில் இருந்து ஊர்வலத்தின் மீது செருப்பை வீசினர். 
 

அய்யாவின் மீது படவேண்டும் என்று வீசினாலும் , அய்யாவின் வாகனம் முன்னே சென்றுவிட்டது , பின்னால் வாகனத்தில் வந்துகொண்டிருந்த தோழர்கள் செருப்பை பிடித்து திருப்பி அடித்தனர் அது இராமன் படத்தின் மீது பட்டுவிட்டது. ஜனசங்கத்தினர் தந்தை பெரியார் மீது படவேண்டும் என்று திட்டமிட்டு செருப்பு வீசினர், அதனை கழகத் தோழர்கள் பயன்படுத்தியது எதிர்ப்பாராத விதமாக நடந்தது.

இந்த நிகழ்ச்சியினை பார்ப்பன நாளேடுகள் சேலத்தில் தி.க. வினர் இராமனை இழிவுபடுத்தினர். இராமன் படத்தினைச் செருப்பால் அடித்தனர் என்று விளம்பரப்படுத்தின. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியை வீழ்த்த கூட்டுச் சேர்த்திருந்த ராஜாஜி – காமராஜர் இதனை தங்களுக்கு கிடைத்த மூலதனமாக கருதி தேர்தல் பரப்புரையைத் தொடங்கினர்.

தி.மு.க மீது இதற்காக வேண்டுமென்றே பழிபோட்டுத் பரப்புரை நடைபெற்றது. விடுதலையில் , உண்மையில் நடந்தது என்னவென்பதையும், திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டிற்கும் திமுகாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை இன்றும் எவ்வளவோ விளக்கம் எழுதியும் கூட மக்கள் மத்தியில் பார்ப்பன ஏடுகள் அதையே பரப்புரை செய்தன.

ராஜாஜி தம்முடைய தமிழ், ஆங்கில வார ஏடுகளில் இதை பெரிதுபடுத்தினார். 
உடனே திராவிடர் கழகம் சார்பாக, திமுக ஆட்சி , இராமனைச் செருப்பால் அடித்ததை அனுமதித்ததா? இப்போது தேர்தலுக்காக குற்றம் சுமத்தும் இதே ராஜாஜி இரண்டாவது முறை முதலமைச்சரான போது , பெரியார் ஆணைப்படி அவரது திராவிடர் கழகம் , பிள்ளையார் சிலைகளைச் செய்து (கோவில்,ஆற்றங்கரையில் உள்ள வழிபடும் பிள்ளையார் அல்ல ) சிலையில் ஒன்றும் தெய்வீகச் சக்தி இல்லை என்பதை விளக்கிட, நாடு தழுவிய அளவில் பிள்ளையாரை விலைக்கு வாங்கி உடைத்தபோது எந்தவொரு சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்காமல்,”மக்கள் பார்த்துக் கொள்வார்கள் “என்று கூறியவர்தானே என்று எடுத்துக்காட்டியபோது அந்தக் கருத்து மக்களிடையே ஆழமாக பதிந்தது.

18.2.1971 அன்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் ஒரு அருமையான அறிக்கையை விடுதலைக்கு அனுப்பினார். அதன் வாசகங்கள் இன்றைக்கும் பொருந்தும். “இன்று ஆத்திகம் என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று நாத்திகம் என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம், உங்களுக்கு இதில் எது வேண்டும் ?என்று வினா எழுப்பி இருந்தார்.

ஆனாலும் மக்களின் மத உணர்வுகளை , பக்தியைத் தேர்தலில் முழுமையாகப் பயன்படுத்தி திமுகாவை வீழ்த்த, முழு வீச்சில் ஏடுகளில் பிரச்சாரம் நடைபெற்றது.
துக்ளக் ஏட்டில் அதன் ஆசிரியர் சோ இராமசாமி அவர்கள்  ஒரு கேலிச் சித்திரம் அட்டைப் படத்தில் வெளியிட்டிருந்தார். 

 

தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு கையில் செருப்பு – மறு கையில் இராமர் படம் . அதை ஓங்கி அடிப்பது போன்று நிற்கின்றார். பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ! மேலே உள்ள துண்டினை இரு கைகளாலும் அனாயாசமாகப் பிடித்துக் கொண்டு, பெரியார் செயலை ஊக்கப்படுத்திடுவது போல, பலே பலே அடியுங்கள் என்பது போலப் பார்க்கிறார். இந்தக் கிண்டல் ஓவியத்தை தமிழ்நாடு காங்கிரஸ் குழு பெரிய சுவரொட்டியாக அச்சிட்டு , தேர்தலில் கடைசி நேரப் பரப்புரையாக செய்தனர்.

தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் ஒவ்வொரு மாவட்ட நிலவரம் பற்றியும் விடுதலையில் கணிப்பு எழுதப்பட்டது . அது பொய்யாகவே இல்லை. மற்றவர்களின் கணிப்புக்கும் , விடுதலையின் எழுத்துக்கும் நேர் எதிர் மாறான நிலைதான். வாக்கு எண்ணுவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஆச்சாரியார் வீட்டிற்குக் காமராசர் சென்றார். தேர்தல் கிலியால் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்கிறது என்பதையும் விடுதலையில் சுட்டிக்காட்டித் துணிந்து தலைப்பிட்டுச் செய்தி வெளியாகியது.

தேர்தல் முடிவுகள் வெளியாகின. ஏற்கனவே 138 ஆக இருந்த திமுக 184 ஆக உயர்ந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எண்ணிக்கை 50 இல் இருந்து 15 ஆக குறைந்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் தந்தை பெரியார் வாழ்த்துத் தந்தி ஒன்றை திருச்சியில் இருந்து கலைஞர் அவர்களுக்கு அனுப்பினார்கள்.

1) எனக்கு இருந்த பழி நீங்கியது
2) நீங்கள் உலகப் புகழ் பெற்றீர்கள்
3) உங்களைப் பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை

28.7.1971 அன்று “தமிழ்நாடு அரசு நாலஞ்சாதி மக்களான சூத்திரர்களுக்காகப் பாடுபடும் அரசுதான். எங்களை எல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன் – இவ்வரசு நாலாந்தர அரசுதான் – பிராமண -சத்ரிய -வைசிய- சூத்திர என்ற முறையில் நாலாந்திர அரசைத்தான் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே நடத்துகிறோம் என இறுமாப்புடனும் , பெருமையுடனும் , கர்வத்துடனும் கூறிக் கொள்கிறேன் ” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் அறிவித்தர். 

தமிழ்நாட்டு மக்கள் தந்தை பெரியாரின் சமூக நீதி  கருத்தியலை மனதில் கொண்டே வாக்களிக்கின்றனர். அதைத்தான் இன்றளவும் நாம் தேர்தல்களில் பார்க்கின்றோம். பாஜக எவ்வளவு முட்டி மோதினாலும், ஜாதிய- மத கலவரங்களை தூண்டினாலும் தமிழ் நாடு வீழ்ந்து விடாமல் இன்று வரை நிற்பதற்கு காரணம் அந்த கிழவன் கற்றுத்தந்து விட்டுப் போன சுயமரியாதை போராட்டம் தான் ! 

 
அதை மீண்டும் அசைத்துப் பார்க்க முடியுமா என்று ரஜினியை வைத்து குருமூர்த்திகளும் , பார்ப்பனீயமும் முயன்று பார்க்கின்றது. சண்டைகளில் தோற்கலாம் போரில்   இறுதி வெற்றி பெரியாரின் கருத்துக்களுக்கே என்பது தான் வரலாறு நமக்கு கூறும் பாடம் !! !!
 
–  வழக்கறிஞர் கனிமொழி, யு.எஸ்.ஏ.
ஆதாரம் : திராவிடர் கழக வரலாறு ( தொகுதி 1) கி. வீரமணி 

From around the web